×

வீட்டு வசதி வாரிய இடத்திற்கான வாடகை பாக்கி 52 லட்சத்தை 1 மாதத்தில் செலுத்த வேண்டும்: அண்ணாநகர் கிளப்புக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: வீட்டு வசதி வாரிய இடத்திற்கான வாடகை பாக்கி 52 லட்சத்தை ஒரு மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என சென்னை அண்ணாநகர் கிளப்பிற்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், செலுத்த தவறும்பட்சத்தில் அந்த கிளப்பை அப்புறப்படுத்த வேண்டுமென்று தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கும் உத்தரவிட்டுள்ளது.சென்னையில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிலத்தில் செயல்பட்டு வரும், அண்ணாநகர் கிளப்பில் மதுபான கூடத்திற்கு அனுமதி கோரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் மனு அளிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த வீட்டு வசதி வாரியம், நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை முதலில் செலுத்துமாறு கடிதம் அனுப்பியது. இதனை எதிர்த்து அண்ணாநகர் கிளப் செயலாளர் ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 அதில், நிலுவையில் இருந்த 52 லட்சத்து 25 ஆயிரத்து 960 ரூபாய் வாடகை பாக்கியில் 20 லட்சம் ரூபாயை செலுத்தி விட்டதாகவும், இருப்பினும் மீதம் இருக்கும் நிலுவை தொகையை செலுத்துமாறு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கடிதம் அனுப்பியுள்ளதால், அதனை ரத்து செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

 இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் கிளப் செயல்படுவதால், அதனுடைய விதிகளை தான் பின்பற்ற வேண்டும். அதன் விதிகளை மீறி மனுதாரர் எந்த அனுமதியும் கோர முடியாது. அவ்வாறு விதிமுறைகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டால் கிளப்பை அப்புறப்படுத்தலாம். பார் செயல்படுவதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் அனுமதி அளிக்க சட்டத்தில் இடமில்லை. மேலும், 7 கிரவுண்டில்  செயல்பட்டு வரும் கிளப்புக்கு வாடகையாக மாதம் 20 ஆயிரம் ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது. தற்போதைய சந்தை மதிப்புப்படி தகுந்த வாடகையை நிர்ணயிக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தமிழக அரசுக்கு சொந்தமானது என்பதால், அதற்கு ஏற்படும் வருவாய் இழப்பு தமிழக அரசுக்கான வருவாய் இழப்புதான். எனவே, நிலுவை வாடகையை செலுத்த தவறினால்  சட்ட ரீதியான நடவடிக்கையை கிளப் மீது எடுக்கலாம்.

 நியாயமான வாடகையை நிர்ணயித்தும், நிலுவையில் உள்ள வாடகை தொகையை கணக்கிட்டும் அதனை 30 நாட்களில் கிளப் நிர்வாகத்திற்கு  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அனுப்ப வேண்டும். அந்த கடிதம் கிடைத்ததில் இருந்து 4 வாரங்களுக்குள்  நிலுவை தொகையை கிளப் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தவில்லை எனில் கிளப்பை காலி செய்வது, நிலுவை தொகை மற்றும் அபராதம் வசூலிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை வீட்டு வசதி வாரியம் மேற்கொள்ளலாம் என்று உத்தரவிட்டு  வழக்கை முடித்து வைத்தார்.




Tags : Housing Board ,ICC ,Anna Nagar Club , For Housing Board space The rent arrears are Rs 52 lakh Must be paid within 1 month: iCourt order to Anna Nagar Club
× RELATED இரு சக்கர வாகனம் மோதி பெண் பலி