மாநில எஸ்சி, எஸ்டி ஆணையத்தின் அதிகாரங்கள் எவை இணையதளத்தில் வெளியிட வேண்டும்: முதல்வருக்கு பணியாளர் நலச்சங்கம் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வித்துறை  டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி/எஸ்.டி பணியாளர் நலச்சங்கத்தின் மாநில தலைவர்‌ டி.மணிமொழி, பொது செயலாளர் டி.மகிமை தாஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாநில அளவில் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்கவும், அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் என்கிற புதிய அமைப்பை தன்னாட்சி செயல்படும் வகையில் அதிகாரத்துடன் அமைத்து மக்களின் எதிர்ப்பார்ப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றினார். தொடர்ந்து ஆணையத்திற்கு அலுவலகம் ஒதுக்கப்படாததை  முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையத்திற்கு தாட்கோ தலைமை அலுவலக கட்டிடத்தில், அலுவலகம் அமைக்க உத்தரவிட்டு, அவ்வாணையம் செயற்பாட்டிற்கு வந்துள்ளது. இதற்காக சங்கம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்து, பாராட்டை தெரிவித்துக் கொள்கிறது. ஆணையத்திற்கென இணையதளம் ஒன்றினை துவக்கி, அதில் ஆணையத்தைப் பற்றிய பொதுவான தகவல்கள், ஆணையத்தின் கடமைகள் மற்றும் பொறுப்புகள், ஆணையத்தின் அதிகாரம், எந்தெந்த வழக்குகளை ஆணையம் விசாரிக்கும். ஆணையம் பரிந்துரை மட்டும் செய்யுமா அல்லது மாநில மனித உரிமைகள் ஆணையத்தை போன்று தீர்ப்பு வழங்குமா, நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகளை ஆணையம் விசாரிக்குமா, ஆணையத்தின் புகார் அளிப்பது எப்படி போன்ற தகவல்களை தமிழிலேயே வெளியிட்டு சாமானிய மக்களும் புரிந்துகொள்ள உதவுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறது.

Related Stories: