×

வேட்டைக்கு சென்ற சிறுவனை சீன ராணுவம் கடத்தியது : அருணாசல பிரதேசத்தில் பரபரப்பு

இடாநகர்: அருணாசல பிரதேசத்தை சேர்ந்த சிறுவன் வேட்டைக்கு சென்றபோது, அவனை சீன ராணுவம் கடத்தி சென்றது. அவனை மீட்டு தர கோரி மத்திய அரசுக்கு சம்பந்தப்பட்ட தொகுதி எம்பி கோரிக்கை வைத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவுடனான எல்லை பிரச்சினையில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. லடாக் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா தனது ராணுவத்தை நிறுத்தி இருக்கிறது. இரு நாடுகளுக்கும் நீடித்து வரும் எல்லை தகராறு தொடர்பாக பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. குறிப்பாக, கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட மோதலுக்கு பிறகு, இந்த பேச்சுவார்த்தை அதிகரிக்கப்பட்டும் பலனில்லை. எனவே, இரு நாடுகளுமே போட்டி போட்டு கொண்டு எல்லையில் வீரர்களை குவித்து வருகிறது.

அருணாச்சல பிரதேசத்திலும் இரு தரப்புக்கும் அமைதியற்ற சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே, சீனாவின் எல்லைகள் மீட்பு மற்றும் விரிவாக்க சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதையடுத்து, ஜனவரி முதல் தேதியில் இருந்தே எல்லை பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வருகிறது. அவர்களின் அந்த சட்டத்தின்படி, அருணாசல பிரதேசமும் அடங்கி உள்ளது.. எனவே, அருணாசலபிரதேசத்தின் எல்லையோர கிராமங்களை கட்டவும் சீனா திட்டமிட்டு வருகிறது. மெல்ல மெல்ல அருணாசலபிரதேசத்தை சொந்தம் கொண்டாட முயன்று வருகிறது. அதன்படி, கடந்த மாதங்களில், அருணாச்சல பிரதேசத்தில் சர்ச்சைக்குரிய இடத்தில் 100 குடும்பங்கள் வாழ கூடிய வகையில் புதிய கிராமத்தை சீனா ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. பிறகு, அம்மாநிலத்தில் உள்ள மேலும் 15 இடங்களுக்கு சீன பெயர்களை அந்த நாடு அதிகாரபூர்வமாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

அருணாசல பிரதேசத்துக்கு உட்பட்ட 8 குடியிருப்பு பகுதிகள், 4 மலைகள், 2 ஆறுகள், ஒரு மலைப்பாதை போன்றவற்றுக்கு சீன, திபெத், ரோமன் எழுத்துகளில் பெயர் சூட்டப்பட்டது. இந்த நடவடிக்கைக்குதான் இந்தியா ஆட்சேபம் தெரிவித்து, தக்க பதிலடி கொடுத்தது. இந்நிலையில் வாலிபர் ஒருவரை சீனா கடத்தியுள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு: அருணாசல பிரதேசத்தின் அப்பர் சியாங் மாவட்டத்துக்கு உட்பட்ட ஜிடோ என்ற கிராமத்தை சேர்ந்த மிரம் தரோன் (17), ஜானி யாயிங் (27), அருகில் உள்ள துதிங் பகுதிக்கு வேட்டையாட சென்றனர். இது சீன எல்லை பகுதியை ஒட்டியதாக கூறப்படுகிறது. இந்த இடத்தில் வேட்டைக்கு சென்ற இருவரையும் சீன ராணுவம் சிறைப்பிடித்து விட்டது. அவர்களிடம் இருந்து ஜானி யாயிங் தப்பி வந்துவிட்டார். மிரம் தரோன் மட்டும் வீடு திரும்பவில்லை. அவனை சீன ராணுவம் கடத்தியதாக தெரிகிறது. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடத்தப்பட்ட சிறுவன் மிரம் தரோனை மீட்க கோரி சம்பந்தப்பட்ட தொகுதியின் எம்பி தபிர் காவோ, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக உள்துறை இணை அமைச்சர் நிஷித் பிரமாணிக்கிடம் எடுத்துரைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

பிரதமர் மவுனம்; ராகுல் விமர்சனம்
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விடுத்துள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
குடியரசு தினத்துக்கு முன்பு வருங்கால இந்தியாவின் சிறுவன் ஒருவர் சீனாவால் கடத்தப்பட்டுள்ளான். நாங்கள் மிரம் தரோனின் குடும்பத்துடன் இருக்கிறோம். நம்பிக்கையை கைவிட மாட்டோம். தோல்வியை ஏற்க மாட்டோம். பிரதமரின் மவுனம் அவருடைய அறிக்கை, இதை அவர் பொருட்படுத்தவில்லை என்பதை காட்டுகிறது’ என்று கூறியுள்ளார்.

Tags : Arunachal Pradesh , Hunting, boy, Chinese army, abducted, in Arunachal Pradesh
× RELATED பிரித்தாளும் சூழ்ச்சிதான் பாஜவின்...