வார்டு மறுவரையரையில் குளறுபடி பொன்னேரி நகராட்சி அலுவலகம் முற்றுகை

பொன்னேரி: வார்டு மறுவறையரை குளறுபடியை கண்டித்து பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேரூராட்சி, சமீபத்தில் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதைதொடர்ந்து, பேரூராட்சியில் இருந்த 18 வார்டுகள், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் வார்டு மறுவரையில் 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டன.இந்நிலையில், 2வது வார்டு வேதகிரி தெருவை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், வாக்காளர் அடையாள அட்டையுடன் பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தங்களது வார்டில் இருந்த சில குடியிருப்புகளை மட்டும் அருகில் உள்ள வார்டுடன் இணைத்துள்ளதாகவும், ஏற்கனவே இரு தரப்புக்கும் இடையே பிரச்னைகள் இருந்து வரும் நிலையில் அருகில் உள்ள வார்டுடன் இணைக்கக்கூடாது. அதுபோல் இணைத்தால் எதிர்வரும் தேர்தலை புறக்கணிப்போம் என கோஷமிட்டனர்.

தகவலறிந்து, நகராட்சி ஆணையர் தனலட்சுமி, சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம்  சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தற்போது வார்டு மறுவரையறை செய்யப்பட்டு புகைப்படத்துடன் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மக்களின் எதிர்ப்பு குறித்து கலெக்டரிடம் தெரிவித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: