×

தேவகோட்டை பகுதியில் புதுவித நோய் தாக்குதலால் பதராகும் நெற்கதிர்கள்

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி வட்டாரத்தில் பல நூறு ஏக்கர் நிலப்பரப்பில் நெல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டு பெய்த பருவமழையைக் கொண்டு இப்பகுதியில் உள்ள கப்பலூர், சடையமங்களம், மீனாப்பூர், அனுமந்தக்குடி, சித்தானூர், சிறுவாச்சி, தேரளப்பூர், கேசனி,களபம், வடகீழ்குடி, உலக்குடி, மித்ராவயல், கொடூர், பெருங்கானூர், குடிக்காடு,நாஞ்சிவயல் உள்ளிட்ட கிராம விவசாயிகள் தங்கள் நெல் சாகுபடி பணிகளை தீவிரமாக தொடங்கினர்.

இந்நிலையில் இதர வயல்களில் கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாரான நிலையில் நெல் மணிகள் திடீரென பதராகி சாம்பல்போல் எரிந்து விடுகிறது. இதனால் ஒவ்வொரு விவ்சாயிக்கும் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இப்பகுதி விவசாயிகள் கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கேசனி கிராம விவசாயி அசோக்குமார் கூறியதாவது, “இந்தாண்டு உரங்களின் கடும் விலை உயர்வு, கூலி அதிகரிப்பு இருந்தும்கூட நகைகளை அடகு வைத்தும், கந்து வட்டிக்கு வாங்கியும் எங்கள் பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறோம்.

இந்தாண்டு பெய்த கனமழையால் பெரும்பாலான வயல்களின் நெற்கதிர்கள் நீருக்குள் மூழ்கி முளைத்து விட்டன. நெல்மணிகள் முற்றி இன்னும் ஒரு சில தினங்களில் அறுவடை செய்ய வேண்டிய நிலையில், திடீரென நெல்மணிகள் பதராகி எரிந்து சாம்பலாகி விடுகிறது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. கேசனி, களபம்,மித்ராவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களின் ஏராளமான நெல்வயல்கள் இப்பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த வயல்களில் இருந்து ஒரு படி நெல்கூட அறுவடை செய்ய முடியாது.

கடந்தாண்டு சரியான பருவத்தில் மழை இல்லாமல் விவசாயம் பொய்த்துப்போனது. ஆனாலும் எங்கள் கிராமங்களுக்கு பயிர்க்காப்பீடு செய்திருந்தும் இதுவரை நிவாரணம் வழங்க வில்லை. நடப்பாண்டிலும் நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கியும், தற்போது திடீரென எரிந்து சாம்பலாகியும் வருகிறது. இது எதுவும் ஏதாவது ஒரு புதுவித நோயா? அல்லது மண்ணில் ஏற்பட்டுள்ள பாதிப்பா? என எங்களுக்கு தெரியவில்லை. எனவே பாதிக்கப்பட்ட நெல் வயல்களை வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக நேரடி ஆய்வு செய்து அதற்கான காரணத்தை கண்டறிய வேண்டும்.

எங்கள் பகுதி வயல்களில் மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மையை விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும். நெல்மணிகள் சாம்பல்போல் எரிந்துவிட்டதால் இந்தாண்டு எங்களுக்கு மிகப்பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே பயிர்க்காப்பீடு நிறுவன அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல்களை நேரடியாக பார்வையிட்டு சேதங்களைப் பதிவு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். இதேபோல் வருவாய்த்துறை அதிகாரிகளும் எங்கள் வயல்களின் பாதிப்புகளை கள ஆய்வு செய்து உண்மை நிலையை அரசுக்கு தெரிவித்து உதவ வேண்டும்.

சேத மதிப்பீடு செய்து நிவாரணம் மற்றும் பயிர்க்காப்பீடு வழங்க பரிந்துரை செய்து உதவ வேண்டும். அப்போதுதான் எங்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இல்லையேல் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பினை எங்கள் வட்டார விவசாயிகள் சந்திக்க நேரிடும்’’ என்றார்.

Tags : Devakottai , Rice stalks in the Devakottai area are threatened by a new disease
× RELATED தேவகோட்டையில் மருத்துவ முகாம்