×

வேலூர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாலாற்றில் நுரையுடன் கலக்கும் அவலம்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வேலூர்: வேலூர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் பாலாற்றில் நுரையுடன் கலப்பதால் நிலத்தடி நீர் விஷமாக மாறும் அபாயம் உள்ளது. எனவே இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பாலாறு விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாக விளங்கியது. இன்றைக்கு சுற்றுச்சூழல் சீரழிவால் பாழ்பட்டு உள்ளது. மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்றது. மணல் கொள்ளையால் பாலாற்றில் பல இடங்களில் முட்செடிகள் முளைத்து காடு போல் மாறியுள்ளது.

ஆக்கிரமிப்புகள், குப்பை கொட்டுவது, கழிவுநீர் கலப்பது, தோல் மற்றும் ரசாயனக் கழிவுகள், மணல் கொள்ளை என பலமுனை தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் இன்றைக்கு அழிவின் பிடியில் பாலாறு சிக்கித் திணறுகிறது. இந்நிலையில் வேலூர் உள்பட 3 மாவட்டங்களில் பல பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள், இறைச்சி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், மருத்துவக்கழிவுகள் கொட்டப்படும் குப்பை தொட்டியாக பாலாறு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த நவம்பர் மாதம் பெய்த கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதில் பாலாற்றில் அமைக்கப்பட்டிருந்த முத்துமண்டபம் பகுதியில் இருந்து கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் பைப்லைன் உடைந்துள்ளது. இதனால் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் பாலாற்றில் நுரையுடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பாலாற்றில் ஓடும் தண்ணீர் விஷமாக மாறும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வேலூர் மாநகராட்சி முத்துமண்டபம் அருகே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து செல்லும் பைப்லைன் உடைந்து, தற்போது கழிவுநீர் நுரையுடன் பாலாற்றில் கலக்கிறது.

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து 20 நாட்களுக்கு மேலாகியும், உடைந்துள்ள பைப்லைனை சீரமைக்காமல் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியத்துடன் செயல்படுகிறது. இதனால் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ெவளியேறும் கழிவுநீரால் பாலாற்றின் தூய்மையை பாதித்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இப்பகுதி பாலாற்றில் மீன் பிடிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே உடைந்து போன பைப்லைனை உடனடியாக சீரமைத்து பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Sewage effluent from Vellore treatment plant mixes with foam: demand for action
× RELATED கவர்ச்சிக்கரமான அறிவிப்புகள் மூலம்...