வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் உயிரோடு எரித்துக்கொலை: திருவண்ணாமலை அருகே அதிகாலை பயங்கரம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இன்று அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியம் மேல்பாலானந்தல் அருகே உள்ள கோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன். இவருக்கு தேவகி (51), இந்திராகாந்தி என்ற மனைவிகள். இந்திராகாந்திக்கு 3 மகளும், மணிகண்டன் (30), விவசாயி என்ற மகனும் உள்ளனர். தேவகிக்கு குழந்தைகள் இல்லை. பச்சையப்பன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டாராம். மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.

மணிகண்டனுக்கும் திருமணமாகி மனைவி மற்றும் தாயார் தேவகி, இந்திராகாந்தி ஆகியோருடன் ஒன்றாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். மணிகண்டன், அவரது மனைவி மற்றும் இந்திராகாந்தி ஆகியோர் வீட்டிற்குள் படுத்துக்கொண்டனர். தேவகி மட்டும் வராண்டாவில் படுத்து தூங்கினார். இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென ேதவகியின் அலறல் சத்தம் கேட்டது. இதைகேட்டு மணிகண்டன் மற்றும் குடும்பத்தினர் வெளியே ஓடி வந்து பார்த்தபோது தேவகி தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தனர். ஆனால் சிறிது நேரத்திலேயே தேவகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மணிகண்டன் மங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மணிகண்டன், ‘எங்களுக்கும், அருகே உள்ள ஒரு நபருக்கும் முன்விரோதம் உள்ளது. அவர்தான் எனது தாயார் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்து கொன்றிருக்க வேண்டும்  என சந்தேகம் உள்ளது’ என போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் முன்விரோதம் காரணமாக தேவகி எரித்து கொல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண் மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: