×

நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் ரூ1.25 லட்சம் பொருட்கள் திருட்டு: திருப்பூரில் பதுங்கி இருந்த வேலைக்காரன் கைது

சென்னை: பிரபல நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் ரூ.1.25 லட்சம் மதிப்புள்ள கேமரா மற்றும் அவர் உடுத்திய துணிகள், விலை உயர்ந்த பொருட்களை திருடிய வேலைக்காரரை தனிப்படை போலீசார் திருப்பூரில் கைது செய்தனர். தமிழ் சினிமாவில் ராஜவம்சம், மொட்டை சிவா கெட்ட சிவா, உள்ளிட்ட பல படங்களில் நிக்கி கல்ராணி நடித்துள்ளார். தனது வசிகர நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார். அதேநேரம், இவர் கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை சேர்ந்த தனுஷ்(19) என்ற வாலிபர், நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் வேலைக்காக பணியமர்த்தப்பட்டார். இந்நிலையில், கடந்த 11ம் தேதி நிக்கி கல்ராணி வீட்டில் இருக்கும் போது, வாலிபர் தனுஷ் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் மூட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியே சென்றார். இதை நடிகை நிக்கி கல்ராணி பார்த்தார்.

இதையடுத்து தனுஷை நிற்குமாறு அவர் சத்தம் போட்டார். ஆனால், தனுஷ் நிற்காமல் சென்றார். உடனே நடிகை தனுஷை துரத்தி கொண்டு ஓடினார். ஆனால் தனுஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் வேலைக்காரன் தனுஷ் என்ன எடுத்து சென்றான் என்று, சந்தேகத்தின் அடிப்படையில் நடிகை, தனது வீட்டில் உள்ள பீரோவை பார்த்த போது அதில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள கேமரா, நடிகை உடுத்திய விலை உயர்ந்த ஆடைகள் என ரூ.1.25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

குறிப்பாக  நடிகை உடுத்திய உள்ளாடைகள் அதிகளவில் மாயமாகி இருந்ததாக கூறப்படுகிறது. பிறகு சம்பவம் குறித்து அண்ணாசாலை காவல்நிலையத்தில் நடிகை நிக்கி கல்ராணி, வேலைக்காரனாக பணியாற்றிய தனுஷ் மீது புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே தனுஷின் தாய் நாகவல்லி விருத்தாசலத்தில் இருந்து சென்னை வந்து தனது மகனை காணவில்லை என்று அண்ணாசாலை காவல் நிலையத்தில் மற்றொரு புகார் ஒன்றும் கொடுத்தார்.

இரண்டு புகார்களின் அடிப்படையிலும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அதில், நடிகை நிக்கி கல்ராணி வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது, வேலைக்கார வாலிபர் தனுஷ் மூட்டையுடன் தப்பித்து ஓடுவதும், நடிகை பின் தொடர்ந்து துரத்தி கொண்டு ஓடும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அதைத்தொடர்ந்து நடிகை வீட்டில் இருந்து பொருட்களை தனுஷ் திருடி ெசன்றதை உறுதிப்படுத்தினர். பின்னர் தனுஷை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

அதன்படி தனிப்படை போலீசார் சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தனுஷ் பயன்படுத்திய செல்போன் சிக்னல் உதவியுடன் தேடினர். அப்போது தனுஷ் பயன்படுத்திய செல்போன் திருப்பூரில் இருப்பதாக சிக்னல் காட்டியது. உடனே தனிப்படை போலீசார் திருப்பூர் சென்றனர். அங்கு தனுஷ் தனது நண்பர் வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. பின்னர் தனுஷை தனிப்படையினர் கைது செய்தனர். தனுஷிடம் இருந்து நடிகை நிக்கி கல்ராணி பயன்படுத்திய துணிகள் மற்றும் உள்ளாடைகள், விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  

பிறகு அவனிடம் நடத்திய விசாரணையில் நடிகை வீட்டில் திருடிய கேமராவை, பணம் தேவைக்காக கோவையில் உள்ள கடை ஒன்றில் தனுஷ் விற்பனை செய்தது தெரியவந்தது. பிறகு கோவையில் கேமரா விற்பனை செய்யப்பட்ட கடையில் இருந்து கேமராவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதைதொடர்ந்து தனுஷை தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து அவர் பணியில் சேர்ந்த 5 மாதத்தில் நடிகை வீட்டில் இருந்து எவ்வளவு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது என்று தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Nikki Kalrani ,Tirupur , 1.25 lakh items stolen from actress Nikki Kalrani's house: A servant who was hiding in Tirupur was arrested
× RELATED கடும் வெயிலில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு குளிர்பானம்