வத்திராயிருப்பு அருகே 9 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்-நாசவேலைக்காக தயாரித்ததா என விசாரணை

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே வனத்துறை ரோந்தின்போது 9 நாட்டு வெடிகுண்டுகளை போட்டு விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம் பெரிய ஓடை பகுதியருகே, வனத்துறையினர் நேற்றுகாலை ரோந்து சென்றனர். அப்போது வனத்துறையினரை கண்டதும், அங்கிருந்த 3 மர்ம நபர்கள் கையில் இருந்த 2 சாக்குப்பைகளை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினர். வனத்துறையினர் சாக்குப்பைகளை பார்வையிட்டபோது உள்ளே நாட்டு வெடிகுண்டுகள் இருந்தது தெரிந்தது.

தகவலின்பேரில், வத்திராயிருப்பு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்ததில் சாக்குப்பைகளில் 9 நாட்டு வெடிகுண்டுகள் இருந்தன. இதையடுத்து விருதுநகர் வெடிகுண்டு நிபுணர்கள், நக்சல் சிறப்பு அலுவல் பிரிவு எஸ்ஐ அருள் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். வெடிகுண்டுகளை ஓடையோரம் பள்ளம் தோண்டி வெடிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின்பேரில், புதுப்பட்டி கிறிஸ்டியான்பேட்டையைச் சேர்ந்த புஷ்பராஜ் (22), சின்னச்சாமி (20), சரத்குமார் (21) ஆகியோரை, வத்திராயிருப்பு காவல் நிலையத்துக்கு அழைத்து விசாரித்து வருகின்றனர். விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதா அல்லது நாசவேலைக்காக தயாரிக்கப்பட்டதா என விசாரித்து வருகின்றனர். திருவில்லிபுத்தூர் டிஎஸ்பி சபரிநாதன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்து வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: