×

நீலகிரி மாவட்டத்தில் நீர் பனியின் தாக்கம் அதிகரிப்பு: மலர் செடி பாதுகாக்கும் பணி தீவிரம்

ஊட்டி :  நீலகிரி மாவட்டத்தில் நீர் பனியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான தேயிலை பூங்காவில் அலங்கார செடிகள் மற்றும் மலர் செடிகளை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரம் காட்டி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்களும், பின் அக்டோபர் மாதம் துவங்கி சில நாட்கள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யும்.6 மாதங்கள் மழை கொட்டி தீர்த்தவுடன் அக்டோபர் மாதம் இறுதி வாரம் முதல் நீர் பனி விழத்துவங்கும். தொடர்ந்து, நவம்பர் மாதம் முதல் வாரம் முதல் உறைப்பனி விழத்துவங்கும்.

ஆனால், இம்முறை தென்மேற்கு பருவமழை குறித்த சமயத்தில் துவங்கி கடந்த மாதம் வரை பெய்தது. இதனால், உறைப்பனி விழுவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த ஒரு மாதமாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான மலர் செடிகள்களை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஊட்டி அருகேயுள்ள தொட்டபெட்டாவில் பனியின் தாக்கம் மற்ற இடங்களை காட்டிலும் சற்று அதிகமாக காணப்படுகிறது. இதனால், இங்குள்ள தேயிலை பூங்காவில் உள்ள அலங்கார செடிகள், மலர் செடிகள் ஆகியன பனியில் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பூங்காவில் உள்ள மலர் செடிகள் மற்றும் அலங்கார செடிகள் கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு மூடி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், தாழ்வான பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள், நீர் நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அவைகளை பாதுகாக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இரவு நேரங்ளில் நீர் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளதால், குளிரும் அதிகமாக காணப்படுகிறது.

தினமும் பாய்ச்சப்படும் நீர்

மே மாதம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடத்தப்படும் மலர் கண்காட்சிக்காக பூங்காவில் உள்ள பாத்திகளில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. தற்போது ஊட்டியில் இரவில் பனி, பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மலர் நாற்றுக்கள் வாடி கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த மலர் செடிகள் பனியில் கருகாமல் இருக்க கோத்தகிரி மிலார் செடிகள் கொண்டு மூடப்பட்டுள்ளன. மேலும் இச்செடிகளுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் தண்ணீர் பாய்ச்சி ஈரப்பதத்துடன் வைக்கப்படுகிறது.

Tags : Nilagiri district , Ooty: As the impact of water and snow has increased in the Nilgiris district, ornamental plants in the tea garden owned by the Horticulture Department.
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பால்...