×

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம்

திசையன்விளை :  உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. உவரியில் பிரசித்தி பெற்ற  சிவாலயமான ஸ்ரீசுயம்புலிங்க சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கொடியேற்றம் கடந்த 10ம் தேதி கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்கள் அனுமதியின்றி நடந்தது. வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு விதித்துள்ள தடை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்கள் கோயில் நடை திறக்கப்படவில்லை. மேலும், பொங்கல் விடுமுறை தினங்களில் சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் கூடும் என்பதால் ஜனவரி 17, 18 தேதிகளில் கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கு அரசு தடை விதித்தது. அதன்படி உவரி கோயிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

  அரசின் விதிமுறை மற்றும் கொரோனா தொற்று காரணமாக தைப்பூச திருவிழாவில் தேராட்டம் நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில் தைப்பூச திருவிழா தேரோட்டத்திற்கு அனுமதி கோரி நேற்று முன்தினம் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி தலைமையில், பாஜ சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜவினர் மற்றும் பக்தர்கள் உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில் முன்பாக ஆர்ப்பாட்டம், கஞ்சி காய்ச்சி காத்திருக்கும் போராட்டம், சாலைமறியல் என பல்வேறு கட்ட போராட்டம் நடத்தினர். வள்ளியூர் ஏ.எஸ்.பி. சமய்சிங் மீனா, ராதாபுரம் அறநிலையத்துறை ஆய்வாளர் கார்த்திகேசுவரி, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி, கோயில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தேரோட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

  அதன்படி நேற்று காலை 7 மணிக்கு தேேராட்டம் நடந்தது. முன்னதாக திருக்கோயிலில் இருந்து சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை தேருக்கு புறப்பாடு நடந்தது. கோயில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், வள்ளியூர் ஏ.எஸ்.பி சமய்சிங் மீனா, போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் தேர் வடம்பிடித்து துவக்கி வைத்தனர். தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விநாயகர் தேரை பெண்கள் மட்டும் இழுத்தனர். கொரோனா இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள் 300 பேருக்கு மட்டுமே தேர் இழுக்க அனுமதி வழங்கப்பட்டது. மற்றவர்கள் அனுமதிக்கப்படவில்லை. தேரோட்டத்தை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இரவு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை.


Tags : Thaipusam Festival ,Uvari Suyambulinga Swami Temple , Thisayanvilai: The Thaipusam festival was held at the Uvari Suyambulinga Swami Temple. Popular in Udaipur
× RELATED தைப்பூச திருவிழா வரும் முன் கடம்பன்...