×

சித்தூரில் 26ம் ஆண்டு நினைவு தினம் முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை-தெலுங்கு தேசம் நிர்வாகிகள் பங்கேற்பு

சித்தூர் : சித்தூரில் 26ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, முன்னாள் முதல்வர் என்டிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சித்தூரில் மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ் 26வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் எம்எல்சி துரை பாபு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவர் பேசியதாவது: ஆந்திர மாநில மறைந்த முன்னாள் முதல்வர் என்டி ராமராவ் திரைப்பட நடிகராக இருந்தபோது, கடவுள் வேடத்தில் பல திரைப்படங்களில் நடித்தவர். ஆந்திர மாநில மக்கள் தற்போதும் அவருடைய படத்தை வைத்து கடவுளாக வணங்கி வருகிறார்கள்.அவர் 1983ம் ஆண்டு கட்சி தொடங்கினார். கட்சி தொடங்கிய ஆறு மாதத்திற்குள் தேர்தலில் போட்டியிட்டு முதல்வராக பதவியேற்றார். இந்திய வரலாற்றில் இதுவரை எந்த மாநிலத்திலும் கட்சி தொடங்கி ஆறுமாதத்தில் முதலமைச்சராக பதவி ஏற்றது இல்லை.

அவரது ஆட்சியில் ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கி வீடுகள் கட்டித் தந்தார். அதேபோல் இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி வழங்கினார்.  ஆந்திர மாநிலம் முழுவதும் ஏராளமான கிராமங்களில் சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமலும் அவதிப்பட்டு வந்தார்கள்.
அவர் முதலமைச்சரானவுடன் அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதியை ஏற்படுத்தித் தந்தார். அதேபோல் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளது என சட்டத்தை கொண்டு வந்தார். தற்போது ஆந்திர மாநிலத்தில் உள்ள பெண்கள் சொத்தில் சம உரிமை பெற்றுக்கொண்டு நலமோடு வாழ்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் என்டி ராமராவ் ஆவார். அவர் தற்போது நம்மிடையே இல்லாதது மிகவும் வருத்தமளிக்கிறது. தற்போது அவரது 26ம் ஆண்டு நினைவு தினத்தை தெலுங்கு தேச கட்சி அலுவலகத்தில் அவருடைய உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறோம். இந்த ஆண்டு அவருடைய 100வது பிறந்த நாள் வர இருக்கிறது.

அன்று முதல் மாநிலம் முழுவதும் தெலுங்கு தேச கட்சி சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு யாத்திரை மேற்கொள்ள உள்ளோம். மேலும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு ஆந்திர மாநில மக்களுக்கு செய்த நல திட்டங்கள் அனைத்தையும் எடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். அதேபோல், தற்போது ஆளும் கட்சியினர் செய்யும் அராஜகங்கள் குறித்து பொதுமக்களிடையே தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் என்டிராமராவ் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக சென்று சித்தூர் கூட்டுறவு வங்கி அலுவலக வளாகம், மாநகராட்சி அலுவலக வளாகம், ஜில்லா பரிஷத் அலுவலக வளாகம் ஆகிய இடங்களில் உள்ள என்டிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் கட்சி மாவட்ட துணைத்தலைவர் காஜூர் பாலாஜி, முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா, சித்தூர் ரூரல் மண்டல தலைவர் மோகன்ராஜ், துணைத்தலைவர் மேஷாக், வழக்கறிஞர் சங்க தலைவர் சுரேந்திரா, பிற்படுத்தப்பட்டோர் சங்க தலைவர் சண்முகம், முஸ்லிம் சிறுபான்மையினர் நகர தலைவர் ஜாபர் ஷரீப் உட்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு என்டிஆர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Tags : Former ,Chief Minister ,NDR ,Chittoor ,Desam , Chittoor: On the occasion of the 26th anniversary of Chittoor, the former Chief Minister paid homage to the statue of NDR by wearing a garland.
× RELATED முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்...