×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரணய கலக உற்சவம் கோலாகலம்

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோபத்துடன் வரும் தாயாரை மலையப்ப சுவாமி சமாதானப்படுத்தும் பிரணய கலக உற்சவம் கோலாகலமாக நடந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வைகுண்ட ஏகாதசிக்கு 6வது நாள் பிரணய கலக உற்சவம் நடத்தப்படுகிறது.

பிரணய கலக உற்சவம் என்பது கோபத்தில் உள்ள தேவி, பூதேவி தாயார்களை மலையப்ப சுவாமி சமாதானப்படுத்தும்   உற்சவம் ஆகும்.அதன்படி இந்த பிரணய கலக உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி தேவி பூதேவி தாயார்கள் பல்லக்கில் எழுந்தருளி ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தின் அருகே (வராக சுவாமி கோயில் எதிரில்) வந்தனர். தொடர்ந்து, மலையப்ப சுவாமி நான்கு மாடவீதி வழியாக வராக சுவாமி கோயிலுக்கு எதிர்திசையில் வந்தடைந்தபோது தாயார்களை சமாதானப்படுத்தும் வகையில் ஜீயர்கள் மற்றும் அர்ச்சகர்கள் இருதரப்பிலும் எதிர், எதிர் திசையில்’ நின்றனர்.

பின்னர், மலையப்ப சுவாமி தரப்பில் ஜீயர்கள் ஆழ்வார் திவ்ய பிரபந்தம் பாடியும், புராண இதிகாசம் படித்தும் தாயார்களை சமாதானபடுத்தினர்.தேவி, பூதேவி தாயார் தரப்பினர் மூன்று முறை பூப்பந்துகளை மலையப்ப சுவாமி மீது வீசியும், அதில் இருந்து தப்பிக்க மலையப்ப சுவாமி தரப்பினர் பின்னால் செல்லும் சம்பிரதாய உற்சவம் நடைபெற்றது.

தாயாரை சமாதானப்படுத்திய பிறகு தேவி, பூதேவி தாயார்களுடன் மலையப்ப சுவாமி இணைந்து கோயிலுக்கு வந்தடைந்தார். அப்போது, வராக சுவாமி கோயில் எதிரே உள்ள நான்கு மாடவீதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து ‘கோவிந்தா  கோவிந்தா என பக்தி முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். இதில், ஏழுமலையான் கோயில் பெரிய ஜீயர், சின்ன ஜீயர், கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி,  மற்றும் அர்ச்சகர்கள் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

Tags : Tirupati Ezhumalayan temple , Thirumalai: Malayappa Swamy pacifies angry mother at Tirupati Ezhumalayan temple
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோவிலில்...