எனக்கு முகக்கவசம் அணிவது பிடிக்கவில்லை.... பிரதமரும் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என கூறியதாக கர்நாடக அமைச்சர் விளக்கம்!!

பெங்களூரு : முகக்கவசம் அணிவது அவரவர் விருப்பம் என்று பிரதமர் மோடி கூறியதால் தாம் அணியவில்லை என்று கர்நாடக அமைச்சர் உமேஷ் கட்டி தெரிவித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறையை உயர் பதவியில் இருப்பவர்களில் சிலர் பின்பற்றுவதில்லை என்று குற்றசாட்டுகளை மக்கள் முன்வைக்கின்றனர். உத்தரப் பிரதேசத்தில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது, பிரதமர் மோடி முகக்கவசத்தை தவிர்த்தாகவும் பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முகக்கவசம் அணியாமல் தேர்தல் பிரச்சாரம் செய்ததாகவும் சர்ச்சை கிளம்பியது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் அதானி தொகுதியில் நடைபெற்ற அரசு விழாவில், மாநில வனத்துறை அமைச்சர் உமேஷ் கட்டி கலந்து கொண்டு பல நல திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் உட்பட பலர் முகக்கவசம் அணியாமல் இருந்தனர்.சாமானிய மக்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும் போது, அமைச்சரே விதியை மீறலாமா என அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, முகக்கவசம் கட்டாயமில்லை என்று பிரதமரே தெரிவித்துவிட்டதாக உமேஷ் கூறினார். மேலும் அவர் கூறியதாவது, பிரதமர், முகக்கவசம் அணிவது கட்டாயம் என யாரையும் நிர்பந்திக்கவில்லை. அது அவரவர் பொறுப்பு. அது அவரவர் விருப்பம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இது என் விருப்பம். எனக்கு முகக்கவசம் அணிவது பிடிக்கவில்லை. அதனால் அணியவில்லை. இதனால் எந்த பிரச்னையும் இல்லை, என்றார்.

Related Stories: