×

மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பலில் பயங்கர வெடிவிபத்து: கடற்படை வீரர்கள் 3 பேர் மரணம்

மும்பை: மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பலில் நேற்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அதில் இருந்த வீரர்கள் 3 பேர் மரணம் அடைந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மும்பையில் உள்ள கடற்படைத் தளத்தில், ஐஎன்எஸ் ரன்வீர் என்ற போர்க்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது நேற்று இரவு திடீரென இந்த கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், கப்பலின் ஒரு அறையில் இருந்த கடற்படை வீரர்கள் 3 பேர் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். வெடி விபத்து ஏற்பட்ட உடனேயே, கடற்பனை வீரர்கள் துரித கதியில் இயங்கினர். உடனடியாக தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

ராஜ்புத் வகையை சேர்ந்த போர்க்கப்பல் இது. கடற்படையில் ராஜ்புத் வகையைச் சேர்ந்த 5 கப்பல்கள் உள்ளன. இதில் 4வது போர்க்கப்பலாக இந்த ஐஎன்எஸ் ரன்வீர் உள்ளது. கடந்த 1986ம் ஆண்டு அக்டோபர் 28ம் தேதி இந்திய கடற்படைக்கு இது அர்ப்பணிக்கப்பட்டது. கிழக்கு கடற்படை பிரிவை சேர்ந்த இந்த கப்பல், மும்பை கடற்படை தளத்துக்கு சமீபத்தில் வந்திருந்தது. விரைவில் இங்கிருந்து புறப்பட்டு, மீண்டும் கிழக்கு கடற்படைப் பிரிவுக்கு திரும்பச் செல்ல தயார் நிலையில் இருந்தது. இவ்வாறு மீண்டும் திரும்பிச் செல்ல தயார் நிலையில் இருந்தபோதுதான், இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த வெடிவிபத்தில் இறந்த வீரர்கள் விவரம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. அவர்கள் யார் என அடையாளம் காணப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இதற்கிடையே, இந்த வெடிவிபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளதாக, கடற்படை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பை கடற்படை தளத்தில் இதற்கு முன்பு தீ விபத்து நிகழ்ந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 23ம் தேதி, இங்கிருந்த ஐஎன்எஸ் ரன்விஜய் என்ற போர்க்கப்பலில், தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அதில் இருந்த 4 வீரர்கள் கடும் தீக்காயம் அடைந்தனர். அவர்களுக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

குடியரசு தின கொண்டாட்டத்துக்கு சில தினங்களே உள்ள நிலையில், மும்பை கடற்படை தளத்தில் மீண்டும் ஒரு வெடி விபத்து ஏற்பட்டது, பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். ஐஎன்எஸ் ரன்வீர் போர்க்கப்பல், 147 மீட்டர் நீளமும் 15.5 மீட்டர் அகலமும் கொண்டது. அதிகபட்சமாக 35 கடல் மைல் வேகத்தில், அதாவது சுமார் 65 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. 15வது சார்க் மாநாட்டின்போது, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உயர் அதிகாரிகளின் பாதுகாப்புக்காக, இலங்கை கடல் எல்லைக்கு சற்று வெளியே, ஐஎன்எஸ் மைசூருடன் சேர்த்து இது நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Mumbai naval , Terrorist fire on warship stationed at Mumbai naval base: 3 naval personnel killed
× RELATED மும்பை கடற்படை தளத்தில் 20...