ஜன.25ம் தேதி மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் காணொலி மூலம் முதல்வர் உரையாற்றுகிறார்: எழிலரசன் எம்.எல்.ஏ. அறிவிப்பு

சென்னை: வரும் 25ம் தேதி மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் உரையாற்ற உள்ளதாக திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன்  எம்.எல்.ஏ அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிவிப்பு:  கழகம் எனும் எஃகு கோட்டையை கண்துஞ்சாது காத்தும் - இனமானங்காத்தும் வரும் தமிழக முதல்வர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்மொழி காக்க இன்னுயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்துவதை, ஆலம் விழுதாக உள்ள தி.மு.க. மாணவர் அணி தனது கடமைகளில் ஒன்றாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ம் நாளன்று தியாகிகளின் துயிலிடங்களில் அஞ்சலி செலுத்தி, தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெல்லாம் பொதுக்கூட்டங்கள் நடத்தி கழக முன்னனி தலைவர்கள் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தும்.  

ஆனால், இவ்வாண்டு உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பெருந்தொற்று அதிகமாக பரவாமல் இருக்க, இம்மாதம் இறுதி வரை பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான ஊர்களில் தி.மு.க. சார்பில் நடத்தப்படும் “தமிழ்மொழி காக்க உயிர்நீத்த மொழிப்போர் காவலர்களுக்கு”  வீரவணக்கம் செலுத்தும் பொதுகூட்டங்கள் இவ்வாண்டு நடத்த இயலாத நிலை உள்ளதை, கழகத் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே, வரும் ஜனவரி 25ம் தேதி (செவ்வாய் கிழமை) அன்று மாலை 6 மணியளவில் அனைவரின் சார்பாக முதலமைச்சர், கழகத் தலைவர் மொழிப்போர் தியாகிகளுக்கு காணொலி மூலம் வீரவணக்கம் செலுத்தி உரையாற்ற உள்ளார். அக்காணொலி கூட்டத்தில் அனைத்து மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள் - துணை அமைப்பாளர்கள் தங்களது மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து மாநகர - நகர - ஒன்றிய - பகுதி - பேரூர் மாணவர் அணியின் நிர்வாகிகள், கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்க செய்து திமுகவின் ஒப்பற்ற தலைவர், முதல்வரின் உரையை கேட்டு வீரவணக்கம் செலுத்திட உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  

Related Stories: