குன்னூர்: குன்னூர் காட்டேரி பகுதியில் ராட்சத பாறை சரிந்து விழுந்து சாலை அந்தரத்தில் தொங்குவதால் போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் கடந்த 10 மாதங்களுக்கு மேல் விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நெடுஞ்சாலை துறையினர் ராட்சத பொக்லைன் உதவியுடன் மண் மற்றும் பாறைகளை அகற்றி வருகின்றனர். இருப்பினும் சில இடங்களில் ராட்சத பாறைகள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அவ்வழியே செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் அச்சத்துடனே பயணித்து வந்தனர்.
இந்நிலையில் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் மழை பெய்தது. இதனால் மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி அருகே ராட்சத பாறை சரிந்து கீழே விழுந்துள்ளது. இதனால் சாலை தற்போது அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இதனால் சாலை சேதமடைந்து போக்குவரத்து பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே நெடுஞ்சாலை துறையினர் வேலைகளை துரிதப்படுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் சாலை இடிந்து விழும் அபாயமும் உள்ளது.