சமூக வலைதளத்தில் பழகி சேட்டை; ஆணாக நடித்து சிறுமி கடத்தல்: லெஸ்பியன் இளம் பெண் கைது

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த வாரம் திடீரென காணாமல் போனார். இதுகுறித்து உறவினர்கள் ஆலப்புழா போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். மாணவியின் செல்போன் நம்பரை வைத்து சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி மெசஞ்சர் என்ற சமூக வலைதளத்தை பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.

அப்போது சந்து என்ற வாலிபருடன் சாட்டிங் செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர் விசாரணையில் அவர்தான் சிறுமியை கடத்தி சென்றதும், அவர் ஆண் அல்ல இளம்பெண் என்பதையும் போலீசார் கண்டுபிடித்தனர். அவர் திருவனந்தபுரம் அருவிக்குழி பகுதியை சேர்ந்த சந்தியா (27). திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது. மாவேலிக்கரை பகுதியில் ஒரு வீட்டில் சிறுமியுடன் சந்தியா இருந்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து சிறுமியை மீட்ட போலீசார் சந்தியாவை கைது செய்தனர்.

தொடர்ந்து நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சந்தியா போதை பொருள் கடத்தும் கும்பலுடன் தொடர்புடையவர். ஏராளமான கிரிமினல் வழக்குகள் சந்தியா மீது உள்ளன. கடந்த 2016ல் திருவனந்தபுரம், காட்டாக்கடை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது 2 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்காக 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவர் சமூக வலைதளங்களில் இதேபோல் மாணவிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்கான கஷ்டங்களை கூற வற்புறுத்தி சிறுமிகளை தனது வலையில் வீழ்த்தி ஓரினசேர்க்கையில் ஈடுபடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. விசாரணைக்கு பின் போலீசார் சந்தியாவை மாவேலிக்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: