×

என்எல்சி நிறுவனத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்கு புதிய மறுவாழ்வு, மீள் குடியேற்ற கொள்கை வெளியீடு: மத்திய அமைச்சர் பங்கேற்பு

நெய்வேலி: கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் புதிய மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்ற கொள்கையை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி காணொலி காட்சி மூலம் வெளியிட்டார். என்எல்சி நிறுவனத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்காக இந்த புதிய மறுவாழ்வுக் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அப்போது அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது: கடந்த 60 ஆண்டுகளாக நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் நிலக்கரித்துறை அமைச்சகத்தின் என்எல்சி இந்தியா நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல வாய்ப்புக்களை அளிக்கும் மிக இலகுவான மறுவாழ்வு கொள்கையை உருவாக்கிய என்எல்சி இந்தியா நிறுவனம் மற்றும் தமிழக அரசின் முயற்சிகளை பாராட்டுகிறேன். பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் இழப்பீட்டை இந்த புதிய மறுவாழ்வுக் கொள்கை உறுதி செய்துள்ளது. புதிய கொள்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வசதிகள் அதிகளவில் உள்ளன. திறன் இந்தியா திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்க தமிழக அரசுடன் என்எல்சி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

நிலையான வாழ்வாதாரத்திற்கும், ஒவ்வொரு கிராமத்தையும் தற்சார்புடையதாக மாற்றவும் இந்த புதிய மறுவாழ்வு மற்றும் மீள் குடியேற்றக் கொள்கை வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார். இதில் மாநில வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் மற்றும் எம்எல்ஏக்கள் சபா.ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன், வேல்முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : NLC ,Union ,Minister , New Rehabilitation and Resettlement Policy Launch for NLC Placeholders: Union Minister Participates
× RELATED கோவையில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ரோடு ஷோ பிசுபிசுத்தது!