பஞ்சாப் முதல்வரின் உறவினர் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்க துறை சோதனை: ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்..!

புதுடெல்லி: சட்டவிரோதமாக மணல் குவாரி நடத்தியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து  பஞ்சாப் முதல்வரின் உறவினர் வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்க துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 117 தொகுதிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 14ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், சீக்கிய மத குருக்களில் ஒருவரான குரு ரவிதாஸ் ஜெயந்தி ஆண்டுதோறும் பிப்ரவரி 10ம் தேதி முதல் 16ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

இதையொட்டி சீக்கியர்கள், உத்தரபிரதேசத்தில் உள்ள பனாரஸ் பகுதிக்கு புனித பயணம் மேற்கொள்வர்கள். அங்குள்ள குரு ரவிதாஸ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார்கள். தற்போது, சட்டசபை தேர்தல் பிப்ரவரி 14ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், சீக்கியர்கள், புனித பயணமான குரு ரவிதாஸ் நினைவிடத்திற்கு செல்வதில் இடையூறு ஏற்படலாம். தேர்தலில் வாக்களிக்கும் சீக்கியர்களின் எண்ணிக்கையும் குறையலாம். இதனால், தேர்தலை தள்ளிவைக்க கோரி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ், பாஜ உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கடிதம் எழுதின.

இவ்விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனை நடத்தியது. இதையடுத்து, பஞ்சாப் தேர்தல் தேதியை 20ம் தேதிக்கு மாற்றி தேர்தல் ஆணையம்  அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இருப்பினும் மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அங்கு, ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜ, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் சட்டவிரோதமாக மண் குவாரிகள் நடத்துவது தொடர்பான முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் நெருங்கிய உறவினரான பூபிந்தர்சிங் ஹனி மற்றும் அவரது உறவினர்கள் மீது புகார் எழுந்தது.

இதையடுத்து, அமலாக்க துறை அதிகாரிகள், இன்று காலை பூபிந்தர் சிங் ஹனி உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், முதல்வரின் உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்துவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: