×

வடலூரில் இன்று தைப்பூச பெருவிழா; வள்ளலார் சத்தியஞான சபையில் 7 திரை விலக்கி ஜோதி தரிசனம்: உள்ளூர் வாசிகள் மட்டும் தரிசனம்

குறிஞ்சிப்பாடி: வடலூர் வள்ளலார் சத்தியஞான சபையில் தைப்பூசப் பெருவிழாவையொட்டி இன்று காலை ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்றது. உள்ளூர் மக்கள் குறைந்த அளவில் அனுமதிக்கப்பட்டு தரிசனம் செய்தனர். கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபையில் 151 வது தைப்பூசப் பெருவிழா நேற்று திருவருட்பா முற்றோதல் மற்றும் சன்மார்க்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதேபோல், வள்ளலார் ராமலிங்க அடிகளார் பிறந்த மருதூர் சன்னதி, தண்ணீரில் விளக்கு ஏற்றிய, கருங்குழி வள்ளலார் சன்னதி, ஒளி தேகம் ஆன மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் ஆகிய இடங்களிலும் கொடி ஏற்றப்பட்டது.

அதை அடுத்து, இன்று அதிகாலை 5.50 மணி அளவில் சபையில் மணி அடிக்கப்பட்டது. சரியாக 6 மணி அளவில் கதவு திறக்கப்பட்டு, ஏழு திரைகளை, ஒவ்வொன்றாக விலக்கி ஜோதி காண்பிக்கப்பட்டது. முதல்கால ஜோதியானது, 6 மணி முதல் 7 மணி வரை 15 நிமிடங்களுக்கு ஒரு முறை காண்பிக்கப்பட்டது. இதில், வடலூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதி மக்கள், சபை வளாகத்தில் தங்கி உள்ளவர்கள் மட்டும் உற்சாகத்துடன் ஜோதி தரிசனத்தை கண்டு, மகிழ்ந்தனர். அவர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி ஜோதி தரிசனம் செய்தனர்.

மக்கள் நேரடியாக பங்கேற்க தடை விதித்துள்ளதால், சபை நிர்வாகம் சார்பில் யூடியூப் சேனல் வழியாகவும், தனியார் தொலைக்காட்சி சேனல்கள் வழியாகவும் ஒளிபரப்பு செய்ய இந்து சமய அறநிலை துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜோதி காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணி, நாளை அதிகாலை 5.30 மணி என ஐந்து காலங்கள் காண்பிக்கப்படும்.

வெறிச்சோடிய சபை வளாகம்
கடந்த 2020 முதல் கொரானா வைரஸ் தொற்று, பரவி வருவதால், பரவல் தீவிரமடையும் போது அரசு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகிறது. அதன்படி, 2020 தைப்பூசம், 2021 தைப்பூசம், இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா பொதுமக்கள் பங்கேற்காமல் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், 5 லட்சம் பேருக்கு மேல் சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, விழுப்புரம், கடலூர், நகபட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து தரிசனம் செய்வது வழக்கம். பெரும் தொற்று, கட்டுப்பாடுகள் காரணமாக மூன்றாவது ஆண்டாக பக்தர்கள் ஜோதி தரிசனத்தை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். பொதுமக்கள், பங்கேற்க தடை என அறிவிக்கப்பட்டதால், வள்ளலார் வளாக பெருவெளி முழுவதும், மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : Thaipusam festival ,Vadalur ,Vallalar ,Satyanarayana ,Sabha , Thaipusam festival in Vadalur today; 7 Screen Torchlight Vision at Vallalar Satyanarayana Sabha: Vision for locals only
× RELATED வடலூர் வள்ளலார் சத்தியஞான சபை முன்பு...