3 நாள் தடைக்கு பின்னர் குற்றாலம், அகத்தியர் அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி :  குற்றாலம் அருவிகளில் 3 நாள் தடைக்கு பிறகு நேற்று சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.  பண்டிகை காலத்தை முன்னிட்டு தொற்று பரவலை தடுக்கும் விதமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 14ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கடந்த மூன்று தினங்களாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில் நேற்று முதல் தடை விலக்கப்பட்டு காலை 6 மணி முதல் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர ஜோதி தரிசனம் நிறைவு பெற்றதாலும் அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுவதாலும் சுற்றுலா பயணிகளின் வருகை சுமாராகவே காணப்பட்டது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் சுமாராகவும் பெண்கள் பகுதியில் குறைவாகவும் தண்ணீர் விழுகிறது.

ஐந்தருவியில் 4 பிரிவுகளில் ஓரளவு தண்ணீர் விழுகிறது. பழைய குற்றால அருவியில் சுமாராக தண்ணீர் விழுகிறது. புலி அருவியில் தண்ணீர் வரத்து அடியோடு நின்று விட்டது. நேற்று மதியம் வரை லேசான வெயிலும் மதியத்திற்குப்பிறகு சற்று இதமான சூழலும் காணப்பட்டது.

விகேபுரம்:  ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் பாபநாசம் அகத்தியர் அருவியிலும் கடந்த 14ம் தேதி முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. 3 நாட்கள் தடை உத்தரவுக்கு பின்னர் நேற்று சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அதே நேரத்தில் பாபநாசம் கோயில் மற்றும் காரையாறு சொரிமுத்தைய்யானர் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

Related Stories: