பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் சின்னாறு தரைப்பாலம் இடிந்து விழுந்தது : போக்குவரத்து நிறுத்தம்

பெரம்பலூர் : பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை இணைக்கும் கீழப்பெரம்பலூர் சின்னாறு தரைப்பாலம் இடிந்து விழுந்ததால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் அருகே உள்ள கீழப்பெரம்பலூர் கிராமத்தில் ஓடும் சின்னாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தையும்-அரியலூர் மாவட்டத்தை இணைக்கும் இந்த தரைப்பாலத்தை கடந்து வேள்விமங்கலம், வீரமநல்லூர் மற்றும் செந்துறை வழியாக அரியலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் சென்று வந்தனர்.

இந்நிலையில் கடந்த வட கிழக்கு பருவமழையின் போது சின்னாற்றில் கரைபுரண்டு தண்ணீர் ஓடியதால் படிப்படியாக பாலம் பழுதடைந்தது. அந்த பாலத்தின் மீது அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமென்ட் ஆலைகளுக்கு சுண்ணாம்பு கல் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களும், கடலூர், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்பு ஏற்றிவரும் அதிகனரக வாகனங்களும் பயணித்தன. மேலும் அரசு தனியார் பேருந்துகள், பள்ளி கல்லூரி பேருந்துகளும் இந்த பாலத்தை கடந்துசென்று வந்தது.

 இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திடீரென பாலத்தின் ஒரு பகுதி திடீரென உள்வாங்கியது. இந்தபழுது மேலும் மேலும் வலுவடைந்து தற்போது முற்றிலுமாக இடிந்து உள்ளே விழுந்து விட்டது. அதிர்ஷ்டவசமாக விபத்து ஏதும் ஏற்படவில்லை. இருந்தாலும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தைக் கடந்து யாரும் செல்லக்கூடாது என்று எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டு, சாலையை மூடியுள்ளனர்.

 2 மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையான இந்த பாலம் மூடப்பட்டு விட்டதால் கனரக வாகனங்கள் சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன.

Related Stories: