×

வடுவூர் பறவைகள் சரணாலயத்தில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணி : 22, 23ல் நடக்கிறது

மன்னார்குடி : மன்னார்குடி அருகே வடுவூரில் 316 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான வடுவூர் ஏரி உள்ளது. வடுவூர் ஏரியை சுற்றி வளமான ஈர நிலங்கள் அதிக அளவில் இருப்பதால் மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா போன்ற மேலை நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் இனப் பெருக்கத்திற்காக வரும் 38 வகையான சுமார் 2 லட்சத்திற்கு மேற்பட்ட பறவைகளை வடுவூர் ஏரி வெகுவாக ஈர்க்கிறது. மேலும் பறவைகளுக்கு தேவையான பல்வேறு உணவு வகைகளை இந்த ஏரி பூர்த்தி செய்கிறது.

அதனால் தமிழக அரசு வடுவூர் ஏரியை பாதுகாக்கப்பட்ட சரணாலயமாக அறிவித்தது. தமிழக வனத்துறை சார்பில் கடந்த 1999ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வடுவூர் ஏரியில் பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பறவைகள் சரணாலயங்களிளும் ஒரே நேரத்தில் வனத்துறை சார்பில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் 2 தினங்கள் நடைபெற உள்ளது.

அதன்படி திருவாரூர் மாவட்ட வனத்துறை சார்பில் வடுவூர், உதயமார்தாண்டபுரம், முத்துப்பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடக்கிறது.வடுவூர் ஏரியில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயத்தில் வரும் 22ம் தேதி காலை நடைபெறும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகளை மாவட்ட வன அலுவலர் டாக்டர் அறிவொளி துவக்கி வைக்கிறார். கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகளை மன்னார்குடி வனச்சரக அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் வனத்துறையினர் செய்து வருகின்றனர்.

இந்த கணக்கெடுப்பு பணிகளில், வடுவூரில் மயிலாடுதுறை தனியார் கல்லூரி விலங்கியல் மற்றும் வன உயிரியல் துறை உதவி பேராசிரியர்கள், இளங்கலை மற்றும் முதுகலை கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் தமிழகம் முழுவதில் இருந்து பறவைகள் ஆர்வலர்கள் ஈடுபடுகின்றனர்.


Tags : Vaduvur Bird Sanctuary , Vaduvur, mannargudi,Birds survey work
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...