தேச சொத்தான கனிம வளங்களை சுரண்டுவது சட்டவிரோதம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்சி டால்மியாபுரத்தில் உள்ள டால்மியா லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், திருச்சியில் உள்ள தங்களது நிறுவனத்திற்கு பெரம்பலூர் மாவட்டம் தேரணி கிராமத்தில் இருந்து கனிமங்களை கொண்டு செல்வதற்கான வாகன அனுமதி வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ஏற்கனவே இந்த பகுதியில் இருந்து கனிமங்களை எடுத்துச் செல்ல வழங்கப்பட்ட அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது. உரிய சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழை வழங்க உள்ளோம் என்றார்.

அப்போது, அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, கனிம வளங்களை எடுத்துச்செல்வதற்கு சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழ் கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மனுதாரரின் நிறுவனத்துக்கு எந்த குத்தகையும் தரப்படவில்லை. நிறுவனத்தின் கோரிக்கையை பரிசீலிக்க உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றார்.வழக்கை விசாரித்த நீதிபதி, ‘உரிய விதிகளை கடைபிடிக்காமல் கனிம வளங்கள் அனுமதி அளவைவிட கூடுதலாக எடுக்கப்படுகிறது. இதுபோன்ற வழக்குகள் நீதிமன்றங்களில் இடைக்கால உத்தரவுடன் பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதால் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகின்றன.

கனிம வளங்களை எடுப்பதில் மிகப்பெரிய அளவில் அரசுக்கு வருவாய் வருகிறது. எனவே, நீதிமன்றங்களில் இடைக்கால உத்தரவு பெற்றுள்ள வழக்குகளில் தடை உத்தரவுகளை நீக்க கோரி மனுதாக்கல் செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். இந்த மனுக்களை நீதிமன்றங்கள் விரைவாக விசாரித்து முடித்துவைக்க வேண்டும். பொதுமக்கள் வருவாய் மற்றும் தேச நலன் சார்ந்துள்ளதால் இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றமும் கவனம் செலுத்த வேண்டும்.வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, கனிம வளத்துறை தொடர்பான பல்வேறு வழக்குகளில் இடைக்கால உத்தரவை பெற்று பல நிறுவனங்கள் நாட்டின் சொத்துக்களை அபகரித்து வருகின்றன. இது சட்டவிரோதமாகும். விதிகளுக்கு முரணாக தேசத்தின் சொத்துக்களை சுரண்டுவதற்கு ஒருவரும் அனுமதிக்க கூடாது. கனிம வளங்களைத் திருடும் சட்ட விரோத செயல்களை மிக கடுமையான முறையில் அணுக வேண்டும்.

இதுபோன்ற வழக்குகளில் பல மனுக்கள் காணாமல் போயுள்ளதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. அதனால், வழக்குகளில் பட்டியலிடப்படாமல் உள்ளன. எனவே, இதுபோன்ற வழக்குகளை தேடி பட்டியலிட உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு ஆவணங்கள் காணாமல் போதல், மனுக்களை வேறு இடங்களில் மாற்றிவைத்தல் போன்ற செயல்களுக்கு பொறுப்பானவர்கள் மீது உயர் நீதிமன்ற பதிவாளர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் பெரிய அளவில் வருவாயை ஈட்டித்தரும் கனிம வளத்துறை தொடர்பான நிலுவை வழக்குகளை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு பதிவாளர் கொண்டு செல்ல வேண்டும். அந்த வழக்குகளை விரைந்து முடிக்க தேவைப்பட்டால் சிறப்பு அமர்வு அமைக்கப்படலாம்” என்று உத்தரவிட்டார்.

Related Stories: