பொங்கலுக்கு சொந்த ஊர் சென்று திரும்புபவர்களால் சென்னையில் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: பொங்கல் கொண்டாட சொந்த ஊருக்கு சென்று திரும்புபவர்களால் சென்னையில் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை நேற்று காலை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: டெல்டா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் சுனாமி போன்று வேகமாக பரவி வருகிறது. இரண்டாம் அலையின்போது சித்த மருத்துவம் பெரிய பங்காற்றியது. கடந்த முறை 73 இடங்களில் சித்த மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டது.ஆதம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட சித்த மருத்துவ முகாமை முதல்வர் திறந்து வைத்தார். தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 1,591 சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவ படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை 10 ஆயிரத்து 360 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 450 படுக்கைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

செங்கல்பட்டில் உள்ள பல தனியார் கல்லூரிகளில் கொரோனா கேர் சென்டர் உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 92 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. இதில் 8900 படுக்கை மட்டுமே தற்போது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பும்போது தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார். அப்போது, தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் எம்.இளங்கோவன், தேசிய சித்த மருத்துவமனை இயக்குனர் மீனாகுமாரி உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.

Related Stories: