நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சம்பா பருவ நெல் விற்பனை செய்ய இணையத்தில் முன்பதிவு செய்யலாம்: கலெக்டர் தகவல்

திருவள்ளுர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து கொண்டு நெல் விற்பனை செய்ய ஏதுவாக, ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள இ - டிபிசி இணையத்தில் சம்பா கொள்முதல் பருவம் 2022ல் விவசாயிகள் தங்களது பெயர், ஆதார் எண், புல எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை www.tncsc.tn.gov.in அல்லது www.tncsc-edpc.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்முதல் செய்ய வேண்டிய தேதியினை முன்பதிவு செய்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், இணையதளத்தில் எதிர்வரும் சம்பா பருவம் 2022 கொள்முதலுக்கு இணையவழி பதிவு முறையின் மூலம் பதிவு செய்து விவசாயிகள் தாங்கள் இருக்கும் கிராமங்களின் அருகாமையில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை தாங்களே தேர்வு செய்து நெல் கொள்முதலுக்கு தேவையான வருவாய் ஆவணங்களான பட்டா, சிட்டா மற்றும் அடங்கல் ஆகியவற்றை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவு செய்த விவசாயிகளின்

செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தின் பெயர், நெல் விற்பனை செய்யப்படும் நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் அனுப்பப்படும்.

விவசாயிகள் தங்கள் செல்போன் எண்ணில் பெறப்பட்ட குறுஞ்செய்தியின் அடிப்படையில் நீண்ட நேரம் காத்திருக்காமல் குறித்த காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து பயன்பெற இந்த இணையவழி பதிவு திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், எண் 46, வள்ளலார் தெரு, பெரியக்குப்பம், திருவள்ளுர் என்ற முகவரியிலும், 044-27664016 என்கிற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: