×

ஆவடி காவல் ஆணையரகம் பகுதியில் முழு ஊரடங்கில் விதிமீறிய 295 வாகனங்கள் பறிமுதல்: 89 பேருக்கு அபராதம்

ஆவடி: ஆவடி காவல் ஆணையரகம் பகுதியில் முழு ஊரடங்கின்போது விதிமீறியதாக 295 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் வைரசை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, தினசரி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையிலும், ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்காணிக்க ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின்படி, சிறப்பு காவல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 25 காவல் நிலையங்களில், 109 கண்காணிப்பு குழுக்கள், 44 ரோந்து வாகனங்கள் உதவியுடன், 1750 காவலர்களை கொண்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் முழு ஊரடங்கை முன்னிட்டு தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்கிறார்களா என சிறப்பு காவல் குழுக்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவையில்லாமல் ஊர் சுற்றித்திரிந்த 289 பேரின் பைக்குகள், 3 ஆட்டோக்கள், 3 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதோடு மட்டுமல்லாமல், முகக்கவசம் அணியாமல் வந்த 89 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதித்தனர். மேலும், கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை மீறியதாக 23 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். இதுகுறித்து, ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், ஊரடங்கின்போது கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். அத்தியாவசிய பணிகளுக்காக மக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.   


Tags : Avadi Police Station , Seizure of 295 vehicles illegally in full curfew in Avadi Police Station area: 89 fined
× RELATED செங்கல்பட்டு அருகே பூச்சி...