×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் ஒசாகா: நடால் முன்னேற்றம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில்  விளையாட நடப்பு சாம்பியன் நவோமி ஒசாகா (ஜப்பான்) தகுதி பெற்றார். ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான  ஆஸி.  ஓபன் மெல்போர்னில் நேற்று தொடங்கியது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடப்பு  சாம்பியனும், நம்பர் 1 வீரருமான நோவாக் ஜோகோவிச் (வயது 34, செர்பியா), கொரோனா தடுப்பூசி போடாததால் விசா ரத்து செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் நடப்பு சாம்பியன் ஒசாகா (24 வயது, 14வது ரேங்க்), கொலம்பியாவின் கமிலா ஒசோரியா (20வயது, 53வது ரேஙக்) மோதினர். அதில் ஒசாகா 6-3, 6-3 என நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 8 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. மற்றொரு முதல் சுற்றில் செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா (26வயது, 4வது ரேஙக்) 6-2, 6-0 என நேர் செட்களில் ஜெர்மனியின் ஆந்த்ரியா பெட்கோவிக்கை (34வயது, 72வது ரேங்க்) எளிதில் வீழ்த்தினார். இப்போட்டி 1 மணி, 7 நிமிடங்களில் முடிந்தது.

லாத்வியாவின் ஆஸ்டபென்கோ (24வயது, 28வது ரேங்க்) 6-7 (7-9), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்லோவேகியாவின் அன்னா கரோலினாவை (27வயது, 90வது ரேங்க்) போராடி வென்றார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 15 நிமிடங்களுக்கு நீடித்தது. நம்பர் 1 வீராங்கனை ஆஷ்லி பார்டி (ஆஸி.), பெலிண்டா பென்சிக், ஜில் தெய்க்மன் (சுவிட்சர்லாந்து), மரியா சாக்கரி (கிரீஸ்), ஜெசிகா பெகுலா (அமெரிக்கா), விக்டோரியா குதெர்மடோவா (ரஷ்யா), விக்டோரியா அசரென்கா(பெலாரஸ்) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

70வது வெற்றி: ஆண்கள் ஒற்றையர்  பிரிவு முதல் சுற்றில் ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் (35 வயது, 6வது ரேங்க்) 6-1, 6-4, 6-2 என நேர் செட்களில் அமெரிக்காவின் மார்கோஸ் கிரோனை (28 வயது, 66வது ரேங்க்) வென்றார். ஆஸ்திரேலிய ஓபனில் நடால் பெற்ற 70வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. கனடாவின் டெனிஸ் ஷபோவலாவ் (22 வயது, 14வது ரேங்க்)  7-6 (7-3), 6-4, 3-6, 7-6 (7-3) என்ற செட்களில் கடுமையாகப் போராடி லாஸ்லோ ஜேரேவை (26 வயது, 52வது ரேங்க்) வென்றார். இப்போட்டி 3 மணி, 23 நிமிடங்களுக்கு நீடித்தது. ஹூபர்ட் ஹர்காக்ஸ் (போலந்து), மேட்டியோ பெரட்டினி (இத்தாலி), பாப்லோ புஸ்டா (ஸ்பெயின்), ஜான் மில்மேன் (ஆஸி.), கேல் மான்பில்ஸ் (பிரான்ஸ்), கரென் கச்சனோவ் (ரஷ்யா) ஆகியோரும் 2வது சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

Tags : Osaka ,Australian Open Tennis ,Nadal , Osaka in the 2nd round of the Australian Open Tennis: Nadal progress
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ்: ஒசாகாவை வீழ்த்தினார் கரோலின்