எல்லை மீறினால்... பீகார் முதல்வருக்கு பாஜ தலைவர் எச்சரிக்கை

பாட்னா: உங்கள் வரம்புக்குள் இருங்கள் மீறினால் 76 லட்சம் பாஜ தொண்டர்கள் தகுந்த பதிலடி தருவார்கள் என்று பீகார் முதல்வர் நிதிஷுக்கு பாஜ மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஷ்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். பீகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணி கட்சிகளான பாஜ மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் இடையேயான மோதல் வலுத்து வருகின்றது. கூட்டணி இருந்தபோதிலும் முதல்வர் நிதிஷ்குமாரை பாஜவினர் அவ்வப்போது கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய தலைவர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் உபேந்திரா குஷ்வாகா ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தனர். இதில் அசோக மன்னர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய நாடக ஆசிரியர் தயா பிரகாஷ் சின்காவிடம் இருந்து பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர். இதனிடையே தயா பிரகாஷ் சின்கா மீது பாஜ மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஷ்வால் வழக்கு பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக ஜெய்ஷ்வால் தனது பேஸ்புக் பக்கத்தில்,‘‘நாடக ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று கோருவதற்கு பதிலாக முதல்வர் நிதிஷ் குமார் கட்சியை சேர்ந்த தலைவர்கள் ஏன் பத்ம விருதை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள். இதற்கு முன் இதுபோன்று நடந்தது கிடையாது. என்னையும், ஒன்றிய அரசின் தலைமையையும் குறி வைத்து கேள்வி எழுப்புகிறார்கள். கூட்டணியில் நாம் அனைவரும் ஒரு எல்லைக்குள் இருக்க வேண்டும்.  இந்த எல்லையின் முதல் நிபந்தனை என்னவென்றால் நீங்கள் இந்த நாட்டின் பிரதமருடன் டிவிட்டர் மூலமாக விளையாட முடியாது. அவ்வாறு டிவிட்டரில் நீங்கள் விளையாடி கேள்வி எழுப்பினால், பீகாரில் இருக்கும் 76 லட்சம் பாஜ தொண்டர்கள் உங்களுக்கு சரியான பதிலடியை தருவார்கள். விருதுகளை திரும்ப பெறும்படி பிரதமரிடம் கேட்பதைவிட முட்டாள்தனமானது எதுவும் இருக்கமுடியாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: