பேராவூரணி- திருவையாறு - புவனகிரி திமுக, அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா

சென்னை: பேராவூரணி தொகுதி திமுக எம்எல்ஏ அசோக்குமார், திருவையாறு தொகுதி திமுக எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், புவனகிரி தொகுதி அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தொகுதி திமுக எம்எல்ஏ அசோக்குமார் (64). இவருக்கு கடந்த சில நாட்களாக இருமல் இருந்தது. இதையடுத்து நேற்றுமுன்தினம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில், அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர், தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்ததில் அவரது மகன் கீர்த்திக்கிற்கும் (35) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருவரும் தங்களை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதி திமுக எம்எல்ஏ துரை.சந்திரசேகரன் (62). இவருக்கு நேற்றுமுன்தினம் சளி மற்றும் இருமல் இருந்துள்ளது. பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் துரை.சந்திரசேகரன் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அவரது குடும்பத்தில் உள்ளவர்கள், தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம், புவனகிரி தொகுதி எம்எல்ஏ அருண்மொழித்தேவன். கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும் உள்ளார். திட்டக்குடி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் இவரது மகன் மற்றும் மனைவிக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அருண்மொழித்தேவன் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் அவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது நேற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து அவர் வீட்டிலேயே தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Related Stories: