×

தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பு ஒன்றிய அரசு மறுபரிசீலனைக்கு வஉசி கொள்ளு பேத்தி கோரிக்கை: உணர்வுகளை வேதனைப்படுத்துவதாக வருத்தம்

கோவில்பட்டி: குடியரசு தின விழாவில் பங்கேற்க தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, மக்களின் உணர்வுகளை வேதனையடைய செய்துள்ளது. எனவே ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென வஉசியின் கொள்ளு பேத்தி  செல்வி தெரிவித்துள்ளார். விடுதலை போராட்ட வீரர் வஉசியின் மகன் ஆறுமுகம் வழி கொள்ளு பேத்தியான தலைமை ஆசிரியை செல்வி, கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்திய விடுதலைக்காக  போராடிய வீரர்களின் தியாகங்கள், அவர்களின் வரலாறுகளை பற்றி அடுத்த தலைமுறையினரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வகையிலும், தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக குடியரசு தின விழாவில் நடைபெறும் அணிவகுப்பின் போது விடுதலை போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் மற்றும் வரலாறு அடங்கிய வாகன ஊர்திகள் ஆண்டாண்டு காலமாக  இடம் பெற்று வருவது வழக்கமான ஒன்று.

ஆனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கப்பலோட்டிய தமிழன் வஉசி, வீரமங்கை வேலுநாச்சியார், மகாகவி பாரதியார் ஆகியோர் இடம் பெற்றிருந்த அலங்கார ஊர்தியை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது, விடுதலை போராட்ட வாரிசுகள் மற்றும் தமிழக மக்களின் உணர்வுகளை வேதனை அடையச் செய்துள்ளது. விடுதலை போராட்ட வீரர்களின் தியாகங்கள் ஒவ்வொரு தலைமுறைக்கும் தெரிய வேண்டியது அவசியம் என்பதால் ஒன்றிய அரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Union Government ,Tamil Nadu , Granddaughter's request for reconsideration of Union Government's denial of permission for Tamil Nadu decorative vehicle: Sorry for hurting feelings
× RELATED தொடங்கியது தேர்தல் பரப்புரை; ஒன்றிய...