புலிகள் காப்பகம், அமராவதி முதலை பண்ணையில் கால்நடை மருத்துவர்களை நியமிக்க தாமதம் ஏன்? அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி முதலைகள் பண்ணையில் கால்நடை மருத்துவர்கள் நியமனத்தில் தாமதம் ஏன் என்று தெரிவிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த அமராவதி முதலைகள் பண்ணையில் கால்நடை மருத்துவர்கள் நியமனம் செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அரசு கூடுதல் வழக்கறிஞர், ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி முதலை பண்ணை ஆகியவற்றில் கால்நடை மருத்துவர்கள் நியமனம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் பெற்று தெரிவிப்பதற்கு பத்து நாள்கள் அவகாசம் வழங்க வேண்டும்.  வனத்துறையின் பரிந்துரைகளை பரிசீலிப்பது தொடர்பான விவகாரம் நிதித்துறை மற்றும் 2 துறையிடம் நிலுவையில் உள்ளது என்றார். இதைப் பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கடந்த டிசம்பர் 9ம் தேதி பிறக்கப்பட்ட உத்தரவின்படி, இவ்வழக்கில் வனத்துறை பரிந்துரையின் நிலை குறித்தும் தெரிவிப்பதோடு, நிதித் துறையின் தாமதம் குறித்தும் விளக்க வேண்டும். கால்நடை மருத்துவர்கள் மற்றும் இதர வசதிகள் தொடர்பாக முறையான ஏற்பாடுகள் இல்லாததால் விலங்குகள் பாதிக்கப்படலாம் என்று கருத்து தெரிவித்து விசாரணையை வரும் 25ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: