×

பொதிகை டிவி விவகாரம்: இந்திய கம்யூ. கண்டனம்

சென்னை: பொதிகை மற்றும் வானொலி ஊடகங்களில் பணியாற்றி வரும் செய்தியாளர்களில் இந்தி மொழி  தெரிந்தவர்கள் மட்டுமே பணியில் நீடிக்கலாம் மற்றவர்கள் வெளியேறலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பொதிகை மற்றும் வானொலி ஊடகங்களில் பணியாற்றி வரும் செய்தியாளர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் இந்தி மொழி தெரிந்தவர்கள் மட்டுமே பணியில் நீடிக்கலாம் மற்றவர்கள் வெளியேறலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது இந்தி மொழி திணிப்பின் மோசமான செயலாகும். இதனை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

வானொலி, பொதிகை தொலைக்காட்சிகளில் பணியாற்றும் மாவட்ட அளவிலான நிருபர்கள், செய்தியாளர்கள், ஒலி, ஒளி பதிவாளர்கள் தமிழ் பேசும் மக்களிடம் தான் செய்திகளை சேகரிக்கிறார்கள். இவர்களுக்கு இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டிய கட்டாயமோ, அவசியமோ இல்லை. இவர்களிடமிருந்து செய்திகளை பெறுகிற தலைமை அலுவலகம் தேவையான மொழிகளுக்கு மாற்றம் செய்து கொள்ள முடியும். இந்த வாய்ப்பை உருவாக்குவதில் ஒன்றிய அரசு கவனம் செலுத்த வேண்டும். இதற்கு மாறாக இந்தி மொழி தெரியாத பணியாளர்களை பணிநீக்கும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும். அவர்கள் தொடர்ந்து நிரந்தர பணியாளர்களாக பணியாற்றவும், குறைந்தபட்ச ஊதியமும், இதர சலுகைகளும் வழங்கப்படுவதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும்.

பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி: சென்னை வானொலி, தொலைக்காட்சிக்கு 38 மாவட்டங்களிலும் பகுதி நேர செய்தியாளர்கள் உள்ளனர். பல் ஊடக செய்தியாளர்கள் சென்னை செய்திப்பிரிவுக்கு தான் செய்திகளை தர வேண்டும். அதற்கு இந்தி தேவையில்லை. ஆனால், இந்தி மொழியறிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. பல் ஊடக செய்தியாளர்களை  நியமிப்பதில் தவறு இல்லை. ஆனால், அப்பணிக்கு இந்தி கட்டாயம் என்ற நிபந்தனையை நீக்க வேண்டும். அதே நேரத்தில் பகுதி நேர செய்தியாளர்களை நீக்கக்கூடாது. அவர்களை படிப்படியாக பணி நிலைப்பு செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

Tags : Package TV affair: Indian Comm. Condemnation
× RELATED விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம்...