×

எண்ணெய் டேங்கர்கள் மீது டிரோன் தாக்குதல் அபுதாபியில் 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் பரிதாப பலி: விமான நிலையம் அருகே குண்டுவெடித்ததாலும் பீதி

துபாய்: அபுதாபியில் எண்ணெய் டேங்கர்கள் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர். அபுதாபி விமான நிலையம் அருகிலும் டிரோன் மூலம் குண்டு வீசப்பட்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் ஏராளமான எண்ணெய் நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் அருகே முசாபா ஐசிஏடி 3 எனும் தொழிற்பேட்டை பகுதியில் அரசுக்கு சொந்தமான அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு உள்ளது. இந்த எண்ணெய் சேமிப்பு கிடங்கில் நேற்று காலை வழக்கம் போல் டேங்கர்களில் எண்ணெய் கொண்டு செல்லும் பணி நடந்து வந்தது. அப்போது திடீரென நடத்தப்பட்ட தாக்குதலில் 3 எண்ணெய் டேங்கர்கள் வெடித்து சிதறின. அடுத்த சில நிமிடத்தில் விமான நிலையத்தின் அருகே விரிவாக்கம் செய்யப்படும் பகுதியிலும் சிறிய ரக குண்டு வெடித்து தீப்பிடித்தது.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே, எண்ணெய் சேமிப்பு கிடங்கில் இருந்து கரும்புகை வானுயர எழும்பும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இந்த பயங்கர தாக்குதலில் 2 இந்தியர்கள், பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் என 3 பேர் இறந்ததாகவும், 6 பேருக்கு லேசான மற்றும் மிதமான காயம் ஏற்பட்டுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்கப் பகுதியில் லேசான தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

தாக்குதலில் இறந்த இந்தியர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இதுதொடர்பாக அபுதாபி அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், தகவல்கள் சேகரித்து வருவதாகவும் இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்தது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், பீதி அடைய தேவையில்லை என்று அபுதாபிக்கான இந்திய தூதர் சஞ்சய் சுதிர் தெரிவித்தார். இந்த தாக்குதல் சிறிய ரக பறக்கும் பொருள் (அது டிரோனாக இருக்கலாம்) மூலம் நடத்தப்பட்டிருப்பதாகவும், இதற்கு காரணமானவர்கள் குறித்து விசாரிப்பதாகவும் அபுதாபி போலீசார் கூறினர். அதே சமயம் இந்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சிப் படையினர் பொறுப்பேற்றுள்ளனர். இந்த அமைப்பு ஏற்கனவே சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனங்கள் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

* எதற்காக நடந்த தாக்குதல்?
ஏமனில் கடந்த 2015ம் ஆண்டு முதல் அரசு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சிப் படைக்கும் இடையே உள்நாட்டுப் போர் நிலவி வருகிறது. இதில், ஏமன் அரசு படைகளுக்கு உதவ சவுதி அரேபிய தலைமையில் அரபு நாடுகள் களமிறங்கின. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தும் ஏராளமான வீரர்கள் ஏமனில் குவிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஹவுதி கிளர்ச்சிப் படை அபுதாபியில் தொடர் தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. கடந்த 2018ல் அபுதாபி சர்வதேச விமானம் நிலையம் அருகே டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். அடுத்த மாதத்தில் துபாய் விமான நிலையம் அருகிலும் டிரோன் தாக்குதலை நடத்தினர். 2017ல் அபுதாபி அணுமின் நிலையத்திலும் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி கூறியது. ஆனால் இத்தாக்குதல்களை அபுதாபி அரசு மறுத்தது. அதே சமயம், ஏமனில் ராணுவ முட்டுக்கட்டை ஏற்பட்டதால் கடந்த 2019ம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் தனது பெரும்பாலான படைகளை வாபஸ் பெற்றது. இருந்தபோதிலும், அமெரிக்கா உடன் சேர்ந்து ஏமன் அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருகிறது. இதன் காரணமாக சமீபத்தில் ஹவுதி கிளர்ச்சிப் படையினர் ஐக்கிய அரபு அமீரக கப்பலை சிறை பிடித்தனர். இதைத் தொடர்ந்து தற்போது அபுதாபியில் டிரோன் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

Tags : Abu Dhabi ,Indians , Drone strike on oil tankers kills 3, including 2 Indians, in Abu Dhabi: Panic over airport blast
× RELATED கோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ.54 லட்சம் தங்கம் கடத்திய நபர் கைது