×

தொழில் முதலீடுகளுக்கு மிகச் சிறந்த மாநிலம் தமிழ்நாடு: ஆய்வில் தகவல்

டெல்லி: தொழில் முதலீடுகளுக்கு மிகச் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2021 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலும் 304 திட்டங்களின் மூலமாக ரூ.1,43,902 கோடி முதலீடுகளை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. 2022 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் அதிகமான தொழில் முதலீடுகளை பெற்றுள்ள மிகச் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகியுள்ளது. 2021 ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலும் தொழில் முதலீடுகளை அதிகமாகப் பெற்றுள்ள மாநிலம் தமிழகமாகும். 304 திட்டங்களின் மூலம் ரூ.1,43,902 கோடியை தமிழகம் மூலதனமாகப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் தமிழ்நாடு ரூ.36,292 கோடியை மட்டுமே தொழில் மூலதனமாகப் பெற்றிருந்தது.

தமிழ்நாட்டிற்கு இந்த நிதியாண்டில் கிடைத்திருக்கும் ஒட்டு மொத்த முதலீட்டு ஆதாயம் ரூ.1,07,610 கோடியாகும். ரூ.77,892 கோடி தொழில் மூலதனத்துடன் குஜராத் மாநிலம் இரண்டாவது இடத்திலும், ரூ.65,288 கோடி தொழில் மூலதனத்துடன் தெலுங்கானா மாநிலம் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன என புராஜெக்ட் டுடே நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய உறுதி பூண்டுள்ள சில நிறுவனங்களில் டாடா குழுமம், JSW Renew, ஹிந்துஸ்தான் யுனிலீவர், டி.வி.எஸ் மோட்டார், அதானி குழுமம், லார்சன் அண்ட் டூப்ரோ ஆகியவை அடங்கும்.

சிறப்பான கொள்கையே காரணம்
தமிழ்நாடு அதிக அளவிலான முதலீடுகளை ஈர்த்திருப்பதற்கு அதன் சிறப்பான கொள்கைகளும், பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கும் அணுகுமுறையுமே காரணங்களாகும். எங்களது பிரச்சினைகளைப் பற்றிக் கேட்பதற்கும், அவற்றை தீர்த்து வைப்பதற்குமான விருப்பம் தமிழ்நாட்டில் இருக்கிறது” என்பதே நிறுவனங்களிடமிருந்து எங்களுக்கு கிடைத்திருக்கும் கருத்தாகும் என்கிறார் தொழில்துறையின் செயலாளர் எஸ்.கிருஷ்ணன். முடிவுகள் விரைவாக எடுக்கப்படுகின்றன. ஊக்கத் தொகுப்புகள் உடனடியாக கிடைக்கின்றன.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் இவை முக்கியமான தேவைகளாக இருக்கின்றன. பொருளாதார பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு விரைந்து முடிவெடுப்பது மிக முக்கியமானதாக இருக்கிறது என்று அவர் மேலும் தெரிவித்தார். மே மாதம் ஆட்சிக்கு வந்த தி.மு.க அரசு பின்டெக், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள், தரவு மையங்கள் உட்பட பலவற்றிற்கான கொள்கைகளை தொடர்ச்சியாக வெளியிட்டு வந்துள்ளது. தொழில் செய்வதற்கான தனது போட்டி வலிமையை, பெருந்தொற்றுக் காலத்திலும் தமிழ்நாடு வலுப்படுத்திக் கொண்டுள்ளது” என்று இந்திய தொழில் குழுமங்களின் கூட்டமைப்புத் (CII) தலைவரும், காவேரி மருத்துவமனையின் நிறுவனத் தலைவருமான எஸ்.சந்திரகுமார் கூறுகிறார்.

புதிய தொழில்கள், உயிரித் தொழில்நுட்பம், மருத்துவ உபகரண உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற உருவாகி வரும் தொழில்களிலும் மாநில அரசாங்கம் எளிதாகத் தொழில் செய்வதற்கான தனது முன் முயற்சிகளைத் தொடர வேண்டும்.

உலக அளவில் நம்பிக்கையைப் பெற்றுள்ள மாநிலம்
அந்நிய நேரடி முதலீட்டில் காணப்படும் உயர்வு, உலக முதலீட்டாளர்களும், தொழில்களில் முன்னணியில் இருப்போரும் தற்போதைய அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை தெளிவாகக் காட்டுகிறது. தமிழ்நாட்டின் அரசியல் தலைமையும், அதிகாரத் துறையினரும் வலிமையாகவும், தொழில் முதலீடுகளை எப்போது ஈர்க்கும் விருப்புறுதியுடனும் இருக்கின்றனர் என்று கெவின்கேர் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான சி.கே.ரெங்கநாதன் தெரிவிக்கிறார். இந்தியா முழுவதிலும் நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 7,764 தொழில் திட்டங்கள் வந்துள்ளன.இவற்றின் மொத்த முதலீட்டு மதிப்பு ரூ.12,76,679 கோடியாகும்.

Tags : Tamil Nadu , Tamil Nadu is the best state for business investment: information in the study
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...