×

குடியரசு தின விழா அணிவகுப்பில் கர்நாடகாவைத் தவிர அனைத்து தென் மாநில அலங்கார ஊர்திகளும் நிராகரிப்பு!!

டெல்லி : தென் இந்தியாவில் பாஜக ஆளும் கர்நாடகாவின் அலங்கார ஊர்திக்கு மட்டுமே குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம் பெறும். இந்த அலங்கார ஊர்தி அணிவகுப்பில் பங்கேற்க 36 மாநிலங்களும் மாடல்களை அனுப்பியிருந்தன. இதில் 12 மாநிலங்களில் அலங்கார ஊர்தி மாதிரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதில் மேற்கு வங்கம், தமிழகம் , கேரளா  உள்ளிட்ட பிற மாநிலங்களின்  சார்பில் வழங்கப்பட்டிருந்த அலங்கார ஊர்திக்கான  மாதிரிகளை  நிபுணர் குழு நிராகரித்துவிட்டது.  தமிழக அரசு சார்பில் வேலு நாச்சியார், வ.உ.சி, பாரதியா உள்ளிட்ட விடுதலை போராட்ட வீரர்களை சித்தரிக்கும் வகையில் அலங்கார ஊர்திக்கான மாடல்  வழங்கப்பட்டிருந்தது. இதில் மாற்றங்கள் செய்யும் படி ஒன்றிய அரசு, அறிவுறுத்தியதை தொடர்ந்து 3 முறை மாற்றங்கள் செய்ததுடன் ஒன்றிய அரசின் அதிகாரிகளுடன் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் விரிவான விளக்கம் அளித்து இருந்தனர்.

இந்த நிலையில் 4ம் கட்ட ஆலோசனைக்கு தமிழ்நாடு அரசை அழைக்காமல் தன்னிச்சையாக தமிழ்நாடு அலங்கார ஊர்தியை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது.இந்திய அளவில் மிகவும் பிரபலமான வீரர்களை எதிர்பார்ப்பதாகவும்,  வ. உ.சி, வேலுநாச்சியார் , பாரதியார்  போன்றவர்களை சர்வதேச தலைவர்களுக்கு தெரியாது எனக் கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர். ஏற்கனவே சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு உருவத்துடன் கூடிய கேரள அரசின் அலங்கார ஊர்தியும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், வித்யாசாகர் மற்றும் தாகூரை மையப்படுத்திய மேற்கு வங்க அரசின் அலங்கார ஊர்திக்கும் ஒன்றிய அரசு அனுமதி மறுத்ததற்கு கண்டனம் எழுந்துள்ளது.

தென்னிந்தியாவில்  பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தைத் தவிர தமிழகம், கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு அரசியல் தலைவர்கள் உள்பட  பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.  ஆனால் கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Tags : Karnataka ,Republic Day Parade , தென் இந்தியா,லங்கார ஊர்தி
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!