திண்டுக்கல் அருகே சோகம் குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் பலி

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே மாணவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ஹரிஷ் (15). திண்டுக்கல் அருகே  தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த வில்லியம் மகன்  ரிச்சர்ட்‌ (14), அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

நண்பர்களான இருவரும் நேற்று ரெட்டியபட்டி அருகே சாலை குளத்தில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது ஹரிஷ் தவறி குளத்தில் விழுந்துள்ளார். அவரைக் காப்பாற்ற ரிச்சர்ட் குளத்தில் குதித்துள்ளார். நீச்சல் தெரியாமல் பரிதவித்த இருவரையும் அப்பகுதியினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர்.

அதேபோல் திண்டுக்கல் அருகே வாழைக்காய்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டி (21). மதுரை சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவரான இவர் நேற்று நண்பர்கள் 5 பேருடன் திண்டுக்கல் அருகே கல்லம்பட்டியில் உள்ள தடுப்பணைக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது தங்கப்பாண்டி மற்றும் சிங்கராஜ் ஆகியோர் சேற்றில் சிக்கினர். நண்பர்கள் சிங்கராஜை முதலில் மீட்டனர். அதற்குள் தங்கப்பாண்டியன்  மூழ்கி பலியானார்.

Related Stories: