திண்டுக்கல்லில் பரபரப்பு ஓடை தண்ணீரில் போதையில் தூங்கிய மில் தொழிலாளி

*பிணம் என தகவல் பரவியதால் வந்த போலீஸ், தீயணைப்புபடையினர் அதிர்ச்சி

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஆலக்குவார்பட்டியைச் சேர்ந்தவர் முருகவேல் (36). தனியார் மில்லில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிகிறார். நேற்று முழு ஊரடங்கு என்பதால் இவர் வேலைக்கு செல்லவில்லை. திருச்சி புறவழிச்சாலை பகுதிக்கு சென்று மது குடித்துள்ளார். போதை தலைக்கு ஏற, அந்த சாலையின் ஓரத்தில் இருந்த ஓடை பாலத்தில் அமர்ந்துள்ளார். போதையில் தடுமாறி ஓடையில் விழுந்துள்ளார். போதை அதிகமானதால் சுயநினைவை இழந்த முருகவேல் 3 மணி நேரமாக தண்ணீரில் மிதந்துள்ளார். உடலில் எவ்வித அசைவும் இல்லை.

 அவ்வழியாக வந்த நபர் ஓடை பாலத்தின் அடியில் மனித உடல் கிடப்பதாக திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்க முயற்சித்த போது, போதை சற்று தெளிந்த முருகவேல் சத்தம் போட்டுள்ளார். இதை கண்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து அங்கிருந்த தீயணைப்புத் துறையினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: