பசிபிக் கடல் எரிமலை வெடிப்பால் சென்னைக்கு பிரச்னை இல்லை : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:   பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கோ தீவின் கடலின் அடிப்பகுதியில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த  தீவை சுற்றியுள்ள நாடுகளில் சுனாமி அலை  தாக்குதல் ஏற்பட்டது. அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளிலும் இந்த பாதிப்பு  இருந்தது. எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட அதிர்வு கடலில்  சுமார் 8 ரிக்டர் அளவில் இருந்ததால் இந்த  சுனாமி பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த அதிர்வு தமிழகத்திலும் சில இடங்களில் உணரப்பட்டது.

சென்னையில் மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாரோ மீட்டரில் இந்த அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த அதிர்வு உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகளில் பதிவாகியுள்ளது. இருப்பினும் இந்த அதிர்வால் சென்னைக்கு எந்த பாதிப்பும்  இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நேற்று தெரிவித்தார்.

 இந்நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் நேற்று சில இடங்களில் லேசான மழை பெய்தது. இன்றும் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோரத்தில் சில மாவட்டங்களில் லேசான மழை இன்று பெய்யும். பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: