இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்க விரைவில் ஆன்லைனில் பத்திரப்பதிவு அமல் : பதிவுத் துறை உயர் அதிகாரி தகவல்

சென்னை :  இடைத்தரகர்கள் அணுகுவதை தடுக்கும் வகையில் இனி பொதுமக்கள் பத்திரபதிவு சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு வரும் நடைமுறையை மாற்றியமைக்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது.

இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்ய திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் பத்திரம் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என்ற நிலை இருந்தது. இதன் மூலம் பொதுமக்கள் எந்த தேதியிலும் பத்திரம் பதிவு செய்யலாம். ஆனாலும் பத்திரம் பதிவு செய்ய பொதுமக்கள் நேரில் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இந்த திட்டத்தின் மூலம் இடைத்தரகர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.

 குறிப்பாக பொதுமக்களிடம் பத்திரப் பதிவுக்கு லஞ்சம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் வகையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் பத்திரப்பதிவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி பொதுமக்கள் இனிவரும் காலங்களில் பத்திரம் பதிவு செய்ய நேரில் வர வேண்டிய அவசியமில்லை.

அதே நேரத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த சில நிமிடங்களிலேயே ஆய்வு செய்து அந்தப் பத்திரத்தை பதிவு செய்து திருப்பி தரும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. முதற்கட்டமாக பரிட்சார்த்த முறையில் தமிழகத்தில் 5 சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த திட்டத்தில் சோதனை வெற்றி பெறும் பட்சத்தில் தொடர்ந்து மற்ற அலுவலகங்களில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக தற்போது ஆதார் எண் மூலம் சம்பந்தப்பட்ட நபர் தானா என்று கண்டறியும் நடைமுறை தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் இடைத்தரகர்களை அணுகுவது முற்றிலுமாக தடுக்கப்படும் என்று பதிவு துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: