×

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 45.12 லட்சம் பேர் பயன் : மருத்துவத்துறை அறிவிப்பு

சென்னை : மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும்  நேற்று முன்தினம் வரை 45 லட்சத்து 12 ஆயிரத்து 420 பேர் பயனடைந்துள்ளனர். இதில் 33 லட்சத்து 22 ஆயிரத்து 203 பேர்   தொடர் சேவைகளை பெற்றுள்ளனர் என்று தமிழக  மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல்  தெரிவித்தனர். தமிழக  சுகாதாரத்துறையின் மக்களைத் தேடி மருத்துவம்  என்ற திட்டம் கடந்த ஆகஸ்ட்  மாதம் 5ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி  வைத்தார். இத்திட்டத்தில்,  பயனாளிகளின் இல்லங்களுக்கு சென்று மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன.

45 வயதும், அதற்கு மேற்பட்ட உயர் ரத்த  அழுத்தம் மற்றும்  நீரிழிவு நோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குதல், நோய்  ஆதரவு மற்றும்  இயன்முறை சிகிச்சை சேவைகள் வழங்குதல், சிறுநீரக  நோயாளிகளுக்கு சுய டயாலிஸ்  செய்து கொள்வதற்குத் தேவையான பைகளை வழங்குதல்,  அத்தியாவசிய மருத்துவ  சேவைகளுக்கான பரிந்துரை போன்ற பல்வேறு சேவைகள்  வழங்கப்படுகிறது.

 தற்போது தமிழகம் முழுவதும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்கள், சென்னை, கோவை, நெல்லை என பல்வேறு நகரங்களில் நகர்புற சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து  அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு  வருகிறது.

இத்திட்டத்தின்  கள அளவிலான குழுவில், தமிழ்நாடு மகளிர்  நலமேம்பாட்டு நிறுவனத்தின்  பயிற்சி பெற்ற பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள்,  இடைநிலை சுகாதார  சேவையாளர்கள், இயன்முறை மருத்துவர்கள், நோய் ஆதரவுச்  செவிலியர் ஆகியோர்  இடம் பெற்றுள்ளனர். பொது சுகாதார துறையின் களப்  பணியாளர்கள்  இக்குழுவினரின் செயல்பாடுகளை கண்காணித்து வழி நடத்துகின்றனர்.

இத்திட்டத்தில் கடந்த 15ம் தேதி மட்டும் முதல் தடவையாக 3,245 பேரும், தொடர் சிகிச்சையாக 9,262 பேர் சிகிச்சை பெற்று பயன் அடைந்துள்ளனர். அதன்படி கடந்த 15ம் தேதி வரை முதல் தடவை சிகிச்சை பெற்றவர்கள் 45 லட்சத்து 12 ஆயிரத்து 420 பேர் பயனடைந்துள்ளனர்.  மேலும் 33 லட்சத்து 22 ஆயிரத்து 203 பேர்  தொடர் சேவைகளை   பெற்றுள்ளனர் என்று தமிழக மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

Tags : Tamil Nadu , Medicine in search of people, Tamilnadu Government
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...