தொடர் விடுமுறையால் நெல்லை மாநகரில் வெறிச்சோடிய சாலைகள்

நெல்லை: பொங்கல், தைப்பூசம் உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக நெல்லை மாநகர சாலைகள், பேருந்து நிலையங்களில் வாகனப் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டன. பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருகிற செவ்வாய்கிழமை வரை 5 நாட்கள் அரசு தொடர் விடுமுறை அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்த பண்டிகை கால தொடர் விடுமுறை தினங்களில் கோயில்களுக்கு சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும், இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற காரணங்களால் நெல்லை மாநகர பகுதிகளில் முக்கிய சாலைகள், வழிபாட்டுத் தலங்கள், அரசு அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவை மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலம், சந்திப்பு மேம்பாலம் மற்றும் டவுன், பாளை, மேலப்பாளையம் உள்ளிட்ட மாநகர பகுதி சாலைகளில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் குறைந்ததால் வெறிச்ேசாடி காணப்பட்டது. தொடர் விடுமுறை காரணமாக நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் வாகனங்களில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதுகுறித்து புதிய பேருந்து நிலைய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சென்னை, பெங்களூர், கோவை, திருப்பதி உள்ளிட்ட வெளியூர்களுக்கு நெல்லையில் இருந்து 25 எஸ்சிடிசி பேருந்துகள் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படுகின்றன. தற்போது தொடர் விடுமுறை காரணமாக மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் பேருந்துகள் இயங்காது என்பதால் திங்கள்கிழமை முதல் வெளியூர் செல்லும் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். அப்போது தேவைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” என்றார்.

Related Stories: