ஒமிக்ரான் பரவல் எதிரொலி; கேரளாவில் அனைத்து நீதிமன்றங்களும் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும் என அறிவிப்பு.!

திருவனந்தபுரம்: கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் எதிரொலியாக கேரளாவில் அனைத்து நீதிமன்றங்களும் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும் என கேரள உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தவிர்க்க முடியாத வழக்குகளில் மட்டுமே நேரடி விசாரணை நடைபெறும். அதிகபட்சமாக 15 பேர் மட்டுமே நீதிமன்றத்திற்குள் அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் தினசரி பாதிப்பாக 2,68,833 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் அனைத்து நீதிமன்றங்களும் நாளை முதல் ஆன்லைனில் செயல்படும்  என கேரள உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது. உயர் நீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும்.

தவிர்க்க முடியாத வழக்குகளில் மட்டுமே நேரடி விசாரணை நடைபெறும். உயர்நீதிமன்றம் பிறப்பித்த அறிவுறுத்தல்களின்படி, உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்வது தொடரும். வழக்கு தாக்கல் செய்வதற்கு மட்டுமே வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் வருவதற்கு அனுமதி இல்லை. நேரடியான வழக்கு தொடர்பான கோப்புகளை தாக்கல் செய்வதற்கு நீதிமன்ற வளாகத்தில் தனி பெட்டி ஒன்று வைக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: