×

சீரழிந்த பொருளாதாரத்தை காப்பாற்ற முயற்சி வௌிநாட்டு பணக்காரர்களுக்கு உடனடியாக நிரந்தர குடியுரிமை பாகிஸ்தான் அரசு அறிவிப்பு

இஸ்லாமாபாத் : நாட்டின் சீரழிந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க, வெளிநாடுகளை சேர்ந்த பணக்காரர்களுக்கு உடனடியாக நிரந்தர குடியுரிமை வழங்கும் திட்டத்தை பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. தீவிரவாதிகள், ராணுவத்தின் மிரட்டலுக்கு இடையேதான் பாகிஸ்தான் அரசு எப்போதும் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, தீவிரவாத அமைப்புகளுக்கு ஊக்கமளிக்கும் செயலால், பாகிஸ்தானுக்கு நிதியுதவி, கடன்கள் அளிக்க வெளிநாடுகள் தயங்குகின்றன. இதனால், பாகிஸ்தானின் பொருளாதாரம் வேகமாக சீரழிந்து வருகிறது. அதன் அன்னிய செலாவணி கையிருப்பும் கரைந்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையை பிரதமர் இம்ரான் கான் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அதில், பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக வெளிநாட்டினர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மிகவும் சீரழிந்து கிடக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில், தனது நாட்டில் புதிய தொழில் தொடங்கவில்லை என்றாலும் கூட, வெளிநாடுகளை சேர்ந்த பணக்காரர்கள் குடியேற விரும்பினால் உடனடியாக நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து அங்குள்ள பணக்காரர்கள் துருக்கி, மலேசியா போன்ற நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். இவர்களை கவரும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் வகையிலும் பாகிஸ்தான் அரசு இந்த நிரந்தர குடியுரிமை திட்டத்தை அறிவித்துள்ளது.

இதே போல், பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் போன்ற புனித தலத்தில் முதலீடு செய்ய விரும்பும் கனடா, அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்கள், பாகிஸ்தானில் தொழில் நிறுவனங்களை தொடங்க விரும்பும் சீனர்கள் ஆகியோரையும் குறி வைத்தும் இத்திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.


Tags : Government of Pakistan , Pakisthan, Economy, Permanant Citizenship
× RELATED கலவரத்தில் பாதிக்கப்பட்ட...