×

இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவி விலகினார் கோஹ்லி

கேப் டவுன் :  இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராத் கோஹ்லி திடீரென அறிவித்து அதிர்ச்சி அளித்துள்ளார்.கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது, இந்திய அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனி திடீரென பதவி விலகியதை அடுத்து புதிய கேப்டனாக கோஹ்லி பொறுப்பேற்றார். அவரது தலைமையில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி டெஸ்ட் அரங்கில் பல வெற்றிகளைக் குவித்து ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 அந்தஸ்தையும் கைப்பற்றியது.

முதலாவது ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறிய இந்திய அணி, பைனலில் நியூசிலாந்துடன் போராடி தோற்றது.ஐக்கிய அமீரகத்தில் நடந்த டி20 உலக கோப்பை தொடருடன் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கோஹ்லி அறிவித்தார். கிரிக்கெட் வாரியத்துக்கும் அவருக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி கேப்டனாக ரோகித் ஷர்மாவை நியமித்தது பிசிசிஐ.

இது தொடர்பாக பிசிசிஐ தலைவர் கங்குலியும், கோஹ்லியும் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்தது பிரச்னையை மேலும் தீவிரமாக்கியது. தென் ஆப்ரிக்க அணியுடன் கேப் டவுனில் நடந்த 3வது மற்றும் கடைசி டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தொடரையும் இழந்த நிலையில், டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக கோஹ்லி நேற்று அறிவித்தார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கோஹ்லி பதிந்த தகவல் விவரம்: கடந்த 7 ஆண்டுகளாக இந்திய அணியை வெற்றிப் பாதையில் செலுத்துவதற்காக, ஒவ்வொரு நாளும் கடின உழைப்பை முழுமையான அர்ப்பணிப்புடன் வழங்கி வந்தேன். எனது பொறுப்பை மிகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் எந்த வித சமரசமும் இன்றி நிறைவேற்றினேன். வாழ்க்கையில் எல்லாமே ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்துதான் தீர வேண்டும். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக எனக்கு இது தான் சரியான தருணம்.

எதை செய்தாலும் 120 சதவீதம் உழைப்பதை வாடிக்கையாகக் கொண்டவன் நான். அப்படி செய்ய முடியவில்லை என்றால் விலகிக் கொள்வதே சரி என்பது எனக்கு தெரியும். இதில் மிகத் தெளிவாக இருக்கிறேன். எனது அணிக்கு நேர்மையற்றவனாக இருக்க என்னால்முடியாது. இத்தனை நீண்ட நெடிய காலத்துக்கு தேசிய அணியை வழிநடத்த எனக்கு வாய்ப்பு வழங்கிய கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக, சக வீரர்கள் அனைவருக்கும் நன்றி.

உங்களால் தான் இந்த பயணம் மறக்க முடியாததாகவும் மிக அழகானதாகவும் அமைந்தது. இதற்கு உதவியாக இருந்த மூத்த சகோதரர் ரவி சாஸ்திரி மற்றும் குழுவினருக்கும் நன்றி. கடைசியாக, கேப்டன் பொறுப்பில் நான் சிறப்பாக செயல்படுவேன், அணியை முன்னேற்றப் பாதையில் வழி நடத்துவேன் என என் மீது நம்பிக்கை வைத்த எம்.எஸ்.தோனிக்கு மிகப் பெரிய நன்றியை காணிக்கையாக்குகிறேன். இவ்வாறு கோஹ்லி தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

*  68 டெஸ்ட் போட்டிகளில் 40 வெற்றிகளைக் குவித்துள்ள கோஹ்லி (11 டிரா, 17 தோல்வி), இந்திய அணியின் மிக வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். தோனி 2வது இடத்திலும் (60 டெஸ்டில் 27 வெற்றி), கங்குலி 3வது இடத்திலும் (49 டெஸ்டில் 21 வெற்றி) உள்ளனர்.
*  உலக அளவில் தென் ஆப்ரிக்காவின் கிரீம் ஸ்மித் (109 டெஸ்டில் 53 வெற்றி, 29 தோல்வி, 27 டிரா), ஆஸி.யின் ரிக்கி பான்டிங் (77 டெஸ்டில் 48 வெற்றி, 16 தோல்வி, 13 டிரா), ஸ்டீவ் வாஹ் (57 போட்டியில் 41 வெற்றி, 9 தோல்வி, 7 டிரா) ஆகியோருக்கு அடுத்து கோஹ்லி 4வது இடத்தில் உள்ளார்.

Tags : Kohli ,Indian Test team , Virat kohli, BCCI, Team India
× RELATED சதம் விளாசினார் கோஹ்லி ஆர்சிபி 183 ரன் குவிப்பு