சபரிமலையில் மகர ஜோதி லட்சம் பக்தர்கள் தரிசனம்

திருவனந்தபுரம் : சபரிமலை  ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி  தரிசனமும் நடந்தது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பக்தி பரவசத்துடன்  மகர ஜோதியை தரிசித்தனர். சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு கால  பூஜைகளுக்கு கடந்த மாதம் 30ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (31ம் தேதி)  முதல் மகரவிளக்கு பூஜைகள் தொடங்கின. இந்த நிலையில் பிரசித்தி பெற்ற  மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நேற்று முன்தினம் நடந்தது.

 முன்னதாக மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்பன்  விக்ரகத்தில் அணிவிக்கப்படும் திருவாபரணம் பந்தளம் அரண்மனையில் இருந்து  கடந்த 12ம் தேதி புறப்பட்டது. இந்த ஊர்வலம் நேற்று முன்தினம் மாலை 6.35 மணியளவில்  சன்னிதானத்தை அடைந்தது. பின்னர் திருவாபரணம் 18ம் படி வழியாக கோயிலுக்குள்  கொண்டு செல்லப்பட்டது. தந்திரி கண்டரர் மகேஷ் மோகனர், மேல்சாந்தி  பரமேஸ்வரன் நம்பூதிரி ஆகியோர் திருவாபரணத்தை பெற்று கொண்டனர். பின்னர் 6.48  மணியளவில் திருவாபரணம் ஐயப்பன் விக்ரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை  நடத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து 6.50 மணியளவில் பொன்னம்பலமேட்டில்  முதல் மகர ஜோதி தெரிந்தது. அப்போது சபரிமலையில் குவிந்திருந்த ஒரு  லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியே சரணம் ஐயப்பா என்று கோஷம்  எழுப்பினர். அதன் பிறகு அடுத்தடுத்து 2 முறை மகர ஜோதி தெரிந்தது.  ஜோதி தரிசித்த பக்தர்கள் மகிழ்ச்சியுடன்  தங்களது  ஊர்களுக்கு திரும்பினர். ஜோதியை தரிசிப்பதற்காக சன்னிதானம், பாண்டிதாவளம்,  பம்பை கில்டாப் உள்பட பல்வேறு இடங்களில் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தது.  

20ம் தேதி நடை சாத்தப்படும்

சபரிமலை  ஐயப்பன் கோயிலில் நாளை (17ம் தேதி) இரவு வரை பக்தர்கள் திருவாபரணத்துடன்  வீற்றிருக்கும் ஐயப்பனை தரிசிக்கலாம். 18ம் தேதி வரை நெய்யபிஷேகம்  நடைபெறும். 19ம்தேதி இரவு வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி உண்டு.  மறுநாள் காலை 6.30 மணியளவில் சபரிமலை ேகாயில் நடை சாத்தப்படும். அன்றுடன்  மண்டல, மகரவிளக்கு காலம் நிறைவடையும்.

Related Stories: