×

பாஜ.வின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு யோகி கோரக்பூரில் போட்டி

புதுடெல்லி : உத்தர பிரதேச சட்டபேரவை தேர்தலில் போட்டியிடும் 107 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர்  தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் அடுத்த மாதம் 10ம் தேதி முதல்  மார்ச் 7 வரை 7 கட்டங்களாக சட்டபேரவை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான பாஜ.வுக்கு,   சமாஜ்வாடி கட்சி கடும்  போட்டியை  ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், பாஜ.வின் முதல் வேட்பாளர் பட்டியலை ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று வெளியிட்டார். முதல் மற்றும் 2வது கட்டங்களில் நடைபெறும் 107 தொகுதிகளுக்கான இந்த பட்டியலில் முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுர்யா, ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின்  மகன் பங்கஜ் சிங், உத்தரகாண்ட் முன்னாள் ஆளுநர் பேபி ராணி மவுர்யா உள்பட பல முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

 ராமர் கோயில்  கட்டப்பட்டு வரும் அயோத்தியில் முதல்வர் ஆதித்யநாத் போட்டியிடுவார் என பேசப்பட்டது. ஆனால், கட்சி  தலைமை  அந்த முடிவை மாற்றி இப்போது கோரக்பூர் நகர தொகுதியில் அவரை நிறுத்தி உள்ளது. துணை முதல்வர் மவுர்யா, சிரத்து என்ற தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்கள் இருவருமே தற்போது சட்ட மேலவை உறுப்பினர்களாக இருக்கின்றனர்.

இந்த வேட்பாளர் பட்டியலில் பிற்பட்டோர் 44 பேர், தலித்துகள் 19 பேர், பொது தொகுதிகளில் 18 பேர் தாக்கூர், பிராமணர் 10, வைஸ்யா வகுப்பினர் 8 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை. கோரக்பூர் மக்களவை தொகுதியில் ஏற்கனவே அவர் 5 முறை எம்பி.யாக இருந்துள்ளார். எனவே, அயோத்தியை விட கோரக்பூர்  பாதுகாப்பான தொகுதியாக இருக்கும் என்பதால், அங்கு அவர் களமிறக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

பெரும்பான்மை வெற்றி ஆதித்யநாத் நம்பிக்கை

கோரக்பூர் தொகுதியில் போட்டியிடுவது பற்றி யோகி ஆதித்யநாத் கூறுகையில், ‘‘கோரக்பூர் நகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளித்த பிரதமர் மோடி, பாஜ தலைவர் நட்டா, கட்சியின் நாடாளுமன்ற குழுவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.  கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் உதவியுடன் கோரக்பூர் மட்டுமின்றி, மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும்  வெற்றி பெற்று  முழு பெரும்பான்மையுடன் பாஜ மீண்டும் ஆட்சி அமைக்கும்,’’ என்றார்.

2003க்கு பிறகு தேர்தலில் போட்டியிடும் முதல்வர்

உத்தர பிரதேச அரசியலில் கடந்த 19 ஆண்டுகளாக விநோதமான நிலை உள்ளது. இந்த காலக்கட்டத்தில் இங்கு முதல்வராக இருந்த யாருமே தேர்தலில் போட்டியிட்டு இப்பதவிக்கு வரவில்லை. அதற்கு மாறாக, சட்ட மேலவை உறுப்பினர்களாக தேர்வாகியே முதல்வராக பதவி வகித்துள்ளனர். சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, யோகி ஆதித்யநாத் ஆகியோர் இந்த பட்டியலில் உள்ளனர்.

 கடைசியாக இந்த மாநிலத்தில், கடந்த 2003ம் ஆண்டு சமாஜ்வாடி கட்சி தலைவராக இருந்த முலாயம் சிங்தான் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு முதல்வரானார். தற்போது, 19 ஆண்டுகளுக்குப் பிறகு சட்ட மேலவை மூலமாக முதல்வராகும் தந்திரத்தை உடைத்து, முதல் முறையாக முதல்வர் பதவிக்கான வேட்பாளராக யோகி போட்டியிடுகிறார்.

மாயாவதி போட்டி இல்லை

உபி முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் 53 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், மாயாவதியின் சொந்த ஊர் அடங்கியுள்ள தத்ரி தொகுதிக்கும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், மாயாவதி போட்டியிட மாட்டார் என அக்கட்சியின் பொது செயலாளர் எஸ்.சி.மிஸ்ரா தெரிவித்தார்.

சரத் பவாருக்கு ஒரு தொகுதி

உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி அமைத்து, சரத்பாவரின் தேசியவாத காங்கிரசும் போட்டியிடுகிறது. இக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சில தொகுதிகளை கேட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்  நவாப் மாலிக் தெரிவித்தார்.

ஆம் ஆத்மிக்கு தாவிய காங்கிரஸ் மான் ஜி

பஞ்சாப் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஜோகிந்தர் சிங் மான் ஜி  அக்கட்சியில் இருந்து விலகி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் நேற்று சேர்ந்தார்.


காங்கிரசில் 50 ஆண்டுகளாக இருந்து வந்த ஜோகிந்தர், பியாந்த் சிங், ரஜீந்தர் கவுர் பட்டால், அமரீந்தர் சிங் ஆகியோரின் ஆட்சியில் அமைச்சராக இருந்துள்ளார். பக்வாரா தொகுதியில் 3 முறை எம்எல்ஏ.வாக இருந்துள்ளார்.



Tags : BJP ,Gorakhpur , Yogi Adityanath To Fight UP Polls From Stronghold Gorakhpur, Not Ayodhya
× RELATED கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு...