யானை தாக்கி 2 விவசாயிகள் பலி

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் அருகே சிக்கரசம்பாளையம் ஊராட்சி பீக்கிரி பாளையம் பகுதியை சேர்ந்தவர் குருநாதன் (78). விவசாயி. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தனது நிலத்தில் சோளம் பயிரிட்டிருந்தார். 13ம் தேதி இரவு காட்டு யானை குருநாதனின் விளை நிலத்திற்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இதைக் கண்ட குருநாதன் யானையை விரட்டுவதற்காக சத்தம் போட்டுள்ளார். அப்போது யானை குருநாதனை  தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்ததில் சம்பவ இடத்திலேயே குருநாதன் உயிரிழந்தார்.

ஆசனூர் மலைப்பகுதி கேர்மாளம் அருகே ஜே.ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்தவர் மசனையன் (55). இவர் அப்பகுதியில் விளை நிலத்தை குத்தகைக்கு எடுத்து மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். அவற்றை அறுவடை செய்து கதிர்களை உலர்த்துவதற்காக விளைநிலத்தில் குவித்து வைத்துள்ளார். நேற்றுமுன்தினம் மசனையன் விளைநிலத்தில் காவலுக்கு இருந்தார்.

அப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறிய காட்டு யானை விளைநிலத்தில் புகுந்தது. இதை கண்ட மசனையன் சத்தம்போடவே, யானை அவரை துரத்தி தாக்கி தும்பிக்கையால் தூக்கி வீசியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

Related Stories: