×

மும்முறை வென்று வந்தேன் : பிரபாகரன் பெருமிதம்

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கிய பொதும்பு பிரபாகரன் கூறும்போது, ‘‘நான் கடந்த இருமுறை 2வது இடத்தையும், தற்போது முதலிடத்தையும் பிடித்துள்ளேன். கூலி வேலைதான் செய்து வருகிறேன். மும்முறை சாதனை புரிந்ததால் அரசு வேலை வழங்கிட கோரிக்கை வைக்கிறேன். ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து, மாடுபிடி வீரர்கள் என்ற உரிய அங்கீகாரத்தை அரசு வழங்கிட வேண்டும்’’ என்றார்.  கடந்த முறை பிரபாகரனுக்கு 2வது பரிசு தரப்பட்டது. ஆனால், தான் முதலிடம் பிடித்ததாக தெரிவித்து, பரிசு வாங்காமல் சென்று விட்டார். பின்னர் அதிகாரிகள், அவரை சமாதானப்படுத்தி 2வது பரிசுக்கான டூவீலரை வழங்கினர்.

ஆள் மாறி வந்த  2 பேர் சிக்கினர்

பாலமேடு ஜல்லிக்கட்டில் பங்கேற்க நேற்று 2 வீரர்கள் வந்திருந்தனர். இவர்கள் மீது சந்தேகமடைந்த சக வீரர்கள் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தனர். ராமச்சந்திரன், தமிழரசன் ஆகிய 2 பேர், வர முடியாத தனது 2 நண்பர்களுக்காக வந்திருப்பதை ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, எச்சரித்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

கருப்பன் காளை சாதித்தது சிறுமியின் சபதம் ‘சக்சஸ்’

பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு நேற்று 9ம் வகுப்பு படிக்கும் சிறுமி அன்னலட்சுமி, வாடிவாசல் அருகே மாடுபிடி வீரர்களுக்கு மத்தியில் துண்டை தலைக்கு மேல் சுற்றியபடி, தனது காளை வெளியில் வந்ததும் வெகு உற்சாகத்தோடு குரல் கொடுத்து ஆரவாரம் செய்தார். அவரது காளையும் களத்தில் நின்று விளையாடி, யாரிடமும் பிடிபடாமல் வெளிவந்தது. தங்க நாணயம், ஏர்கூலர் என பரிசுகளை பெற்ற இவரை, அரங்கமே வியந்து பார்த்தது. இவர் கடந்த 4 ஆண்டுகளாக தன் காளைக்குப் பயிற்சியளித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் தோற்ற நிலையில், இந்த ஆண்டு நிச்சயம் வெற்றி பெறுவேன் என கூறியிருந்தார். தனது சபதத்தை இவரது பெரிய கருப்பன் காளை காப்பாற்றியுள்ளது என்றார். இதேபோல், நிலையூரைச் சேர்ந்த நிஷா என்ற சிறுமி உள்ளிட்டோரின் காளைகளும் வெற்றிக்கனியை பறித்தன.


Tags : Prabakaran , madurai, palamedu,Jallikattu
× RELATED ஜானுவை மறக்க வைத்த செந்தாழினி: கவுரி கிஷன் நெகிழ்ச்சி